ADVERTISEMENT

டோர் டெலிவரி தொடர்ந்து நடைபெறுகிறது... தீவிர நடவடிக்கையில் காவல்துறை!!

02:38 PM Jun 07, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்தியது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சமூக விரோதிகள், சாராய வியாபாரிகள் ஆந்திரா, மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் இருந்து கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், மது பாட்டில்கள், சாராயம் ஆகியவற்றை தினசரி கடத்திவருகிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதும், போதை ஆசாமிகள் மது இல்லாமல் தவிப்பதும்தான். அவர்களின் தாகத்தைப் போக்க ஒருபக்கம் மது வகைகளும், போதைப் பொருட்களும் கடத்திவரப்படுகின்றன. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் வீடுகளிலேயே கள்ளச்சாராயம் காய்ச்சுவது, கல்வராயன் மலை போன்ற பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி அந்த சரக்கைப் பல்வேறு மாவட்டங்களுக்கும் கிராமங்களுக்கும் கடத்துவது தொடர் சம்பவங்களாக நடைபெற்றுவருகின்றன.

இதற்கு உதாரணமாக சில சம்பவங்களைப் பார்ப்போம். கள்ளக்குறிச்சி அருகிலுள்ள சித்தலூர், வேங்கை வாடி, பானையங்காவல், வாணவரெட்டி, புக்கிரவாரி, கலையநல்லூர் இப்படி பல்வேறு கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழில் எக்ஸ்பிரஸ் வேகமெடுத்துள்ளன. இதற்காக தேர்ந்தெடுத்துள்ள இடம் மக்கள் நடமாட்டம் இல்லாத ஏரி பகுதிகள், விவசாய நிலப்பகுதி, வனத்துறைக்கு சொந்தமான காடுகள், ஊருக்குள்ளேயே தனித்திருக்கும் வீடுகள்... இப்படி பல்வேறு வழிகளில் எல்லாம் சாராயம் காய்ச்சும் தொழில் குடிசை தொழிலாகவே வேகமெடுத்துள்ளன. இப்படி காய்ச்சப்படும் சாராயம், செல்ஃபோன் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆர்டர் கொடுத்தால் போதும், வீடு தேடி கொண்டு சென்று டோர் டெலிவரி செய்யப்படுகிறது. 200, 300க்கு விற்பனை செய்யப்பட்டுவந்த ஒரு லிட்டர் சாராயம், டாஸ்மாக் மது கிடைக்காததால் தற்போது ஆயிரம் ரூபாய்வரை விலை உயர்ந்துள்ளதாம். இதை வாங்குபவர்கள் அந்த சாராயத்தில் மேலும் சுடுதண்ணீரைக் கலந்து விற்பனை செய்து அதிக லாபம் பார்க்கிறார்கள். ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு காய்கறி வாங்கச் செல்வதாக கூறி மினி லாரி, டெம்போ போன்ற வாகனங்கள் அங்கே சென்று காய்கறிகள், பழங்கள் கீரை போன்றவற்றைக் கொள்முதல் செய்வதோடு, அங்கிருந்து மதுபாட்டில்களை வாங்கி அதற்குள்ளே பதுக்கி வைத்து இங்கே கொண்டுவந்து அதிலும் கலப்படம் செய்து அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதித்துவருகிறார்கள்.

அது மட்டும் இல்லாமல், வீடுகளிலும் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது என்பதற்கு உதாரணமாக உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எ.வ.கோட்டை போலீசார், திருக்கோவிலூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிரஸ் என்ற பெயரில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார் ஒன்று வேகமாக வந்தது. அந்தக் காரை மடக்கிப் பிடித்த போலீசார் சோதனை செய்தனர். அந்தக் காரில் 20 லிட்டர் கள்ளச்சாராயம் இருந்துள்ளது. இதையடுத்து அந்தக் காரையும் சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அந்தக் காரில் சாராயம் கடத்தி வந்தவர், புகை பெட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த மணி என்பதும் இவர் தனது ஊரில் உள்ள தன் வீட்டுக்குள் சாராய ஊறல் போட்டு குக்கரை வைத்து வீட்டுக்குள்ளேயே சாராயம் காய்ச்சி அதை கார், லாரிகள் மூலம் டியூப்களில் அடைத்து எடுத்துச் சென்று வெளியூர்களுகளில் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரது வீட்டுக்கு சென்று சோதனை செய்த போலீசார், அங்கிருந்த 5 லிட்டர் சாராயம் அதைக் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட குக்கர் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். அதேபோன்று கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் உள்ள முந்திரிக்காடு கரும்பு தோட்டம் ஆகியவற்றைத் தேர்வுசெய்து அங்கே கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் தொடர் சம்பவங்களாக நடைபெற்றுவருகிறது.

பண்ருட்டி அருகில் உள்ள காமாட்சி பேட்டை என்ற கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது சம்பந்தமான தகவல் புதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு கிடைத்துள்ளது. அங்கிருந்த காவல் ஆய்வாளர் நந்தகுமார், தனிப்பிரிவு போலீசார் கோபால் உள்ளிட்ட போலீசார் அங்கு விரைந்து சென்று ஆய்வுசெய்தபோது, வீட்டிலேயே திருட்டுத்தனமாக சாராயம் காய்ச்சிய மணிகண்டன், சிவ மணிகண்டன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அதேபோன்று புதுச்சேரி பகுதியிலிருந்து கடத்திவந்த கொக்குப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரை 24 கலப்பட மது பாட்டில்களுடன் அவரை கைது செய்துள்ளனர். அதேபோன்று ஆண்டிகுப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்ற 50 வயது ஐயப்பன் என்பவரையும் சத்யராஜ் என்பவரையும் கள்ளசாராய பாட்டில்களுடன் கைதுசெய்துள்ளனர். இதுபோன்று கள்ளச்சாராயம் காய்ச்சுதல் வெளிமாநில மது, கஞ்சா கடத்துதல்... இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை சுமார் 400க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து மது, சாராயம், கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களையும் தேடித் தேடி கண்டுபிடித்து தடை செய்கின்றனர்.

ஆனால் இதையும் மீறி போதை ஆசாமிகளுக்கு வீடு தேடிச் சென்றுகொண்டிருக்கிறது போதை சரக்குகள். எனவே டாஸ்மாக் கடை திறந்தால், இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் குறைய வாய்ப்பு இருக்கிறது. சீன எழுத்து டாஸ்மாக் கடை மூலம் பல குடும்பங்கள் சீரழிவதை ஒருபக்கம் தடுத்தால், கடத்தல் மது, கஞ்சா, கள்ளச்சாராயம், புகையிலை பொருட்கள் என மற்றொரு வகையில் போதை ஆசாமிகளின் கைகளுக்கு கிடைத்துவிடுகிறது. இவை கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் கிராமங்களுக்குள் ஊடுருவிச் சென்றுகொண்டுதான் உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT