Skip to main content

கடலூர், விழுப்புரம் - கடையடைப்பு நேர குழப்பத்திற்கு மாவட்ட ஆட்சியர் தீர்வு!

Published on 24/07/2020 | Edited on 24/07/2020

 

img

 

கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு வணிகர் சங்கங்கள் தாமாய் முன்வந்து வெவ்வேறு கடையடைப்புகள் அறிவிப்பது மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியதையடுத்து கடலூர் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு குழப்பத்தைத் தீர்க்க முன்வந்துள்ளார்.

 

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள நகரங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வியாபாரிகள் கடைகளைத் திறக்கும் நேரத்தைக் குறைத்து வருகிறார்கள். மேலும் கடையடைப்பும் அவ்வப்போது நடைமுறைப் படுத்துகிறார்கள். மேலும் திட்டக்குடி பெண்ணாடம், விருத்தாசலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை எனப் பல்வேறு நகரங்களில் உள்ள வியாபாரிகள் ஒன்று சேர்ந்து கடையடைப்பு - கடைதிறப்பு சம்பந்தமாகக் கூட்டம் நடத்தி அதன்படி பெண்ணாடம் நகரில் காலை 6 மணி மதியம்  2 மணி வரை கடை திறப்பது என முடிவு செய்துள்ளனர்.

 

திட்டக்குடியில் 25. 26. 27 ஆகிய மூன்று நாட்கள் தொடர்ந்து கடையடைப்பு நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். ஒவ்வொரு சிறிய பெரிய நகரங்களில் வியாபாரிகள் கடையடைப்பு நடத்துவது குறித்தும் கடை திறக்கும் நேரம் குறித்தும் மாறுபட்ட நேரங்களை அறிவித்து வருகின்றனர். இது பொதுமக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

வியாபாரிகள் கடை திறப்பு, கடையடைப்பு அறிவிப்பது நோய்ப் பரவலைத் தடுக்கும் என்ற நல்ல நோக்கத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டாலும் கூட அதில் ஒரு ஒருங்கிணைப்பு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

 

இச்செய்தி மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமூரிவரை சென்றுள்ளதையடுத்து, மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளதாவது, "சில ஊர்களில் வர்த்தக சங்கத்தினர் தனிப்பட்ட முறையில் மூன்று நாட்கள் இரண்டு நாட்கள் கடையடைப்பு நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். அப்போது அனைத்துக் கடைகளும் அடைக்கப்படுவதில்லை. சில கடைகள் திறந்திருக்கின்றன. இந்த அறிவிப்பால் மக்களுக்கு குழப்பமும் பாதிப்பும் தான் ஏற்படும். ஏனெனில் முன்கூட்டியே பொருட்கள் வாங்க மக்கள் ஒரே நாளில் அதிக அளவில் கூடுவார்கள். ஆகவே வியாபாரிகள் அந்தந்த ஊர்களில் தனிப்பட்ட முறையில் கடையடைப்பு செய்யப்போவதாக அறிவிப்பதைத் தவிர்க்க வேண்டும். இதுகுறித்து தாலுகா அளவில் வட்டாட்சியர்கள், கோட்டாட்சியர்கள் தலைமையில் வியாபாரிகள் கூட்டம் ஏற்பாடு செய்து, அதன்படி கடை திறப்பு நேரம், கடையடைப்பு நாட்களை முடிவு செய்ய வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆட்சியரின் அறிவிப்பை மக்கள் வரவேற்று உள்ளனர்

 

 

சார்ந்த செய்திகள்