ADVERTISEMENT

17ஆம் நூற்றாண்டில் மதுரை கோயில் திருப்பணிக்கு தானமாக வழங்கப்பட்ட செலுகை கிராமம்...

09:57 AM Aug 31, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கி.பி.17ஆம் நூற்றாண்டில் மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோயில் மகாகோபுர திருப்பணிக்கு செளிகை பிள்ளைகுடி என்ற கிராமம் தானமாக வழங்கப்பட்டதை சொல்லும் 378 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு சிவகங்கை மாவட்டம் செலுகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் செலுகையில் பிள்ளையார் கோயில் அருகில் ஒரு கல்வெட்டு இருப்பதாக திருவாடானை நாகணியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் அர்ச்சுனன் அளித்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு அக்கல்வெட்டைப் படியெடுத்து ஆய்வு செய்தார். இதுபற்றி வே.ராஜகுரு கூறியதாவது,

4 அடி உயரமும், 1¼ அடி அகலமும் உள்ள ஒரு கல்லில் மேலே திரிசூலமும், அதன் இரு புறங்களிலும் சந்திரன், சூரியன் சின்னமும் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. அதன் கீழே 24 வரிகள் கொண்ட கல்வெட்டு உள்ளது.

ஸ்வஸ்திஸ்ரீ என்ற மங்கலச் சொல்லுடன் தொடங்கும் இக்கல்வெட்டு, சக ஆண்டு 1564 விய வருடம், பங்குனி மாதம் 14ஆம் நாள் வெட்டப்பட்டுள்ளது. இது கி.பி.1642 ஆகும். அப்போது மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் அய்யன் அவர்களுக்கு புண்ணியமாக கூத்தன் சேதுபதியின் மகன் தம்பிசேதுபதித்தேவர் மதுரை மீனாட்சி சொக்கநாதர் சன்னதியில் மகாகோபுர திருப்பணிக்கு செளிகை பிள்ளைகுடி என்ற இக்கிராமத்தைத் தானமாக விட்டுள்ளார்.

கல்வெட்டில் கூறப்படும் தானத்துக்கு குந்தகம் செய்வதனால் ஏற்படும் விளைவுகளைச் சொல்லும் ஓம்படைக்கிளவி பகுதியில் ‘இந்த ஊருக்கு அகுதம் பண்ணினவன் கெங்கை கரையிலே காரம் பசுவையும், மாதா பிதாவையும், பிராமணனையும், குருவையும் கொன்ற தோஷத்திலே போவாராகவும்’ என கூறப்பட்டுள்ளது. தற்போது செலுகை என அழைக்கப்படும் இவ்வூர் கல்வெட்டில் செளிகை பிள்ளைகுடி எனப்படுகிறது. ஊர்ப்பெயர் தெளிகை என கல்வெட்டில் எழுதப்பட்டு செளிகை என திருத்தப்பட்டுள்ளது.

போகலூரை தலைநகராக கொண்டு ஆண்ட கூத்தன் சேதுபதியின் மறைவுக்குப்பின் அவர் சகோதரர் தளவாய் சேதுபதி கி.பி.1635இல் ஆட்சிக்கு வந்தார். கூத்தன் சேதுபதியின் மகனான தம்பித்தேவருக்கு மன்னராகும் உரிமை வழங்கப்படவில்லை. எனினும் கி.பி.1639 மற்றும் 1640இல் திருமலை நாயக்கர் உதவியுடன் இவர் சேதுநாட்டை ஆண்டுள்ளார். அதன் பின்னரும் மதுரை மன்னரின் ஆதரவுடன் தம்பித்தேவர் தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளதை இக்கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது. இதில் உள்ள சக ஆண்டும் தமிழ் ஆண்டும் பஞ்சாங்கத்தின்படி பொருந்தவில்லை, தவறாக உள்ளது.

சேதுபதிகள் ஆட்சிக்காலத்தில் தானம் கொடுத்த நிலத்திலேயே அதற்குரிய கல்வெட்டையும் நடுவது வழக்கமாக இருந்துள்ளது. அவ்வகையில் தானமாக விடப்பட்ட இவ்வூரின் மத்தியில் இக்கல்வெட்டு நடப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி சொக்கநாதரை ஆண்டுதோறும் மாட்டு வண்டிகளில் சென்று வழிபடும் வழக்கம் இவ்வூர் மக்களிடம் சமீபகாலம் வரை இருந்துள்ளது. மதுரை குருவிக்காரன் சாலையில் இவ்வூர் பெயரில் செலுகை மண்டகப்படி மண்டபம் ஒன்று உள்ளது. இது இவ்வூராரின் மதுரையுடனான நீண்டகாலத் தொடர்புக்கு ஆதாரமாக திகழ்கிறது.” இவ்வாறு அவர் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT