ADVERTISEMENT

மருத்துவமனையில் பிறந்தநாள் கொண்டாட்டம்; அலட்சியத்தால் கருவிலேயே இறந்த குழந்தை? 

04:52 PM Sep 28, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிதம்பரம் அரசு மருத்துவமனைக்குத் திங்கள்கிழமை இரவு காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கூச்சூர் கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் மனைவி இளவரசி பிரசவத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது மருத்துவர்கள் அவரை பரிசோதித்துவிட்டு காலை 4 மணிக்குத் தான் அறுவை சிகிச்சை செய்யமுடியும் என்று கூறியுள்ளனர். அப்போது வலியால் துடித்த இளவரசியை நீண்ட நேரத்திற்குப் பிறகு பரிசோதித்த போது குழந்தை அசைவு இல்லை என்று கருதி அவசரமாக அறுவை சிகிச்சை செய்து இறந்த நிலையில் பெண் குழந்தையை எடுத்துள்ளனர்.

இதனையறிந்த அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்த உடனே சரியான சிகிச்சை அளித்திருந்தால் குழந்தையைக் காப்பாற்றி இருக்கலாம் ஏற்கனவே பனிக்குடம் உடைந்த பெண்ணுக்குத் தாமத சிகிச்சையால் குழந்தை இறந்ததாக மருத்துவமனையில் நள்ளிரவில் பிரச்சனை செய்து மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையறிந்த சிதம்பரம் காவல்துறையினர் மருத்துவமனையில் குவிக்கப்பட்டனர். தகவல் அறிந்த சிதம்பரம் டி.எஸ்.பி. ரமேஷ் ராஜ், மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி அசோக் பாஸ்கர் உள்ளிட்டவர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து இளவரசியின் தாய் கூறுகையில், “காட்டுமன்னார்கோவில் அருகே ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் திங்கள் இரவு பரிசோதனை செய்தோம். அங்கு அவருக்குப் பனிக்குடம் உடைந்துவிட்டது. உடனடியாக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறிவிட்டனர். அவசர ஊர்தியில் அழைத்து வந்தோம். அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு காலை 4 மணிக்கு ஆப்ரேசன் எனக் கூறிவிட்டனர். வலி வந்து துடித்த போது செவிலியர்களிடம் கூறினோம். அவர்கள் உதாசினப்படுத்தி அலட்சியமாக எரிச்சல் அடைந்த நிலையில் பேசினார்கள். பின்னர் அவர்கள் இரவில் பிறந்தநாள் கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டிக்கொண்டு கொண்டாடினார்கள். திட்டினாலும் பரவாயில்லை என அந்த நேரத்தில் குழந்தை அசைவு இல்லை என்று கூறிய பிறகு தான் பரிசோதனை செய்ததில் குழந்தை இறந்தது தெரியவந்து. உடனடியாக அறுவை சிகிச்சை செய்து இறந்த நிலையில் குழந்தையை எடுத்தனர். இதற்கு பணியிலிருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்களின் அலட்சியமும் அவர்களின் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடியதுமே காரணம்” எனக் குற்றம் சாட்டுகிறார்.

இதுகுறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவஅதிகாரி அசோக் பாஸ்கர் கூறுகையில், “இந்த மருத்துவமனையில் கரோனா காலகட்டத்தில்கூட பிரசவ வார்டு செயல்பட்டு மாதத்திற்கு 400-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்குப் பிரசவம் பார்த்து நல்லமுறையில் அனுப்பியுள்ளனர். ஆகஸ்டு மாதம் மட்டும் 459 பிரசவம் நடைபெற்றுள்ளது. இது வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. பனிக்குடம் உடைந்து 24 மணி நேரம் சுகப்பிரசவத்திற்குக் காத்திருக்கலாம். மருத்துவர்கள் உடனடியாக பரிசோதனை செய்தபோது நல்லமுறையில் தாய் சேய் இருந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மருத்துவ குழுவினரைக் கொண்டு விசாரணை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குழந்தை இறந்த ஆதங்கத்தில் கேக் வெட்டிய சம்பவத்தைத் தொடர்புப் படுத்துகிறார்கள். இதுகுறித்து விவரங்கள் விசாரணையில் தெரியவரும்” என்றார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT