ADVERTISEMENT

“பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் தமிழகம் இருக்கிறது!”- விருதுநகர் மகளிரணிக் கூட்டத்தில் கனிமொழி பேச்சு!

05:13 PM Feb 25, 2020 | santhoshb@nakk…

தி.மு.க மகளிரணி மாநிலச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க மகளிரணி ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

விருதுநகர் மாவட்ட தி.மு.க மகளிரணி ஆய்வுக்கூட்டம் தி.மு.க மகளிரணி மாநிலச் செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாநில மகளிரணி துணைச் செயலாளர் தமிழரசி ரவிக்குமார், விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

இந்தக் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியபோது,“அம்மையார் ஆட்சியில் இருக்கும் பொழுது மாணவிகளுக்கு சைக்கிள் கொடுத்தார்கள். சில நல்ல திட்டங்களும் செய்தார்கள். அதனை நாம் மறுக்கவில்லை. ஆனால் அம்மையார் பெயரைக் கொண்டு ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்களே.. இந்த ஆட்சியிலே பெண்களுக்காக ஏதாவது ஒரு நல்ல திட்டமாவது செய்துள்ளனரா? பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? இதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நீங்கள் நேரத்தை விரயமாக்க கூடாது என்பதற்காக தலைவர் கலைஞர் அவர்கள் இலவச கேஸ் ஸ்டவ் கொடுத்தார்கள். ரேஷன் கடையில் போய் பொருள் வாங்கி வரவேண்டும் என்றால் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. எத்தனை முறை போய் காத்திருக்க வேண்டியுள்ளது.

ADVERTISEMENT

சுய உதவிக் குழுக்களை எல்லாம் கலைத்து விடக்கூடிய மிக மோசமான ஒரு சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்று சொல்லக் கூடிய ஒரு நிலை. அதுவும் எந்த திசையில் திரும்பினாலும், தெருவில் நடந்து போனாலும், வீட்டில் இருந்தாலும் அங்கு இருக்கக்கூடிய பெண்களுக்கு பாதுகாப்பில்லை.. யார் வேண்டுமானாலும் வீட்டில் புகுந்து பெண்கள் மீதான வன்முறை, திருட்டு என்று பல துன்பங்களுக்கு அவர்கள் ஆளாகக்கூடிய நிலை இருக்கிறது.

கருத்துக்களை பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் போடலாம் என்றால் கூட, வெளியில் கூட போக வேண்டாம் என்று நினைத்தால், அந்தப் பெண்கள் எந்த அளவுக்கு மோசமாக தாக்கப்படுகிறார்கள்? எவ்வளவு கொச்சைப் படுத்தப் படுகிறார்கள்? இதைத் தடுக்க இந்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படி எந்த விதத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

கிராமங்களில் இருக்கக்கூடிய.. முக்கியமாக பெண்களுக்கு.. ஒரு நூறு நாள் வேலை இருக்க வேண்டும் என்பதற்காக, திமுகவும் காங்கிரஸும் இணைந்து கொண்டுவரப்பட்ட நூறுநாள் வேலைத்திட்டம் இன்றைக்கு அலங்கோலமாக மாற்றப்பட்டுள்ளது. யாருக்கும் சம்பளம் இல்லை.. வேலை இல்லை.. விலைவாசி மட்டும் ஏறிக் கொண்டே போகிறது. சம்பளத்தை உயர்த்தியபாடில்லை. பிள்ளைகளுக்கு சத்துணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக சத்துணவில் தலைவர் கலைஞர் அவர்கள் முட்டை கொடுத்தார்கள். இன்றைய அரசாங்கம் பிஜேபிக்கு பயந்துகொண்டு இஸ்கோம் என்ற அமைப்பிற்கு அந்த சத்துணவுத் திட்டத்தையே தாரை வார்த்துக் கொடுத்து விட்டார்கள். அதுவும், சென்னையில் ஒரு அதிகாரி சொல்கிறார் - வெங்காயம் பூண்டு சாப்பிடுவது தமிழர்களின் பண்பாடு இல்லை என்கிறார். .இப்படி முட்டை மட்டுமல்ல.. வெங்காயம் பூண்டு இன்றி நமக்கு உணவு தர ஒரு திட்டத்தை வகுத்து கொண்டிருக்கின்றனர்.

வேலை வாய்ப்பு இல்லை, ஏனென்றால், புதிய தொழிற்சாலைகள் வருவதில்லை பெண்களுக்கு பாதுகாப்பில்லை..தமிழ்நாட்டில் உள்ள எல்லா உரிமைகளையும் டெல்லியில் உள்ள எஜமானர்கள் பிரதமர் மோடி மற்றும் பிஜேபியும் சொல்லக்கூடிய அத்தனைக்கும் தலைவணங்கி தமிழ்நாட்டின் எல்லா உரிமைகளையும் விட்டுக் கொடுக்கக்கூடிய ஒரு ஆட்சி இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து இந்திய நாடு முழுவதும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தளபதி கையெழுத்து இயக்கம் நடத்திக் காட்டினார். முஸ்லிம்கள் மட்டுமல்ல.. எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும், எல்லா நம்பிக்கையைச் சார்ந்தவர்களும்தான் கையொப்பம் இட்டுள்ளனர்.

கொண்டு வரப்பட்ட மசோதா இன்று சட்டம் ஆனதற்குக் காரணம் அதிமுகதான். அவர்கள் மாநிலங்களவையில் எதிராக ஓட்டு போட்டிருந்தால் இச்சட்டத்தை நிறைவேற்றி இருக்க முடியாது. இதற்கு காரணம் அதிமுக. இந்த நாட்டின் மீது ஒரு நம்பிக்கை இல்லாத.. இந்த நாட்டு மக்களின் நம்பிக்கையை பெற முடியாத.. இந்த நாட்டிற்கு துரோகம் செய்து இருக்கக்கூடிய இந்த அதிமுக ஆட்சி, எந்த காலக்கட்டத்திலும் மறுபடியும் இங்கே ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக இங்கே இருக்கக்கூடிய ஒவ்வொரு பெண்ணும் சூளுரை எடுத்து பாடுபட வேண்டும்.

மக்கள் தயாராக இருக்கிறார்கள். தளபதியால்தான் தலைவர் கலைஞர் ஆட்சியை மறுபடியும் கொண்டு வர முடியும் என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உதயசூரியனுக்கு வாக்களிக்கத் தயாராகி விட்டார்கள்.“ என்று பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT