ADVERTISEMENT

தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனை கைது செய்யக்கூடாது... உத்தரவை நீட்டித்த உயர்நீதிமன்றம்

08:27 AM Dec 01, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனை கைது செய்யக்கூடாது என்ற உத்தரவை, வரும் ஜனவரி 5- ஆம் தேதி வரை நீட்டித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி தி.மு.க. எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன், கடந்த 1995- ஆம் ஆண்டு, குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை வாங்கியது தொடர்பான குவிட்டன்தாசன் என்பவரின் புகார் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெகத்ரட்சகன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் மற்றும் ஸ்ரீ நிஷா ஆகியோர், கடந்த செப்டம்பர் மாதம் 30- ஆம் தேதி சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜராகினர். அதுபோல, கடந்த 12- ஆம் தேதி, சி.பி.சி.ஐ.டி. போலீசார், ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக, சென்னை பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று ஆவணங்களை ஆராய்ந்தனர்.

இந்த வழக்கில், சி.பி.சி.ஐ.டி. சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், அதுவரை வழக்கில் தொடர்புடைய ஜெகத்ரட்சகனை கைது செய்யக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதி சதீஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சி.பி.சி.ஐ.டி. போலீசார் சார்பில் கால அவகாசம் கோரப்பட்டது.

தொடர்ந்து, வழக்கு விசாரணையை வரும் ஜனவரி மாதம் 5- ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை ஜெகத்ரட்சகனை கைது செய்யக்கூடாது என ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டதோடு, இவ்வழக்கின் விசாரணை முடியும் வரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டாம் எனவும் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT