
மோசடி புகார் தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசில் இணை அமைச்சராக இருந்தவர் ஜெகத்ரட்சகன். தற்போது, அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ளார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில், கடந்த 1995- ஆம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தைச் சட்டத்துக்கு உட்பட்டு முறையாக வாங்கியதாகத் தெரிவித்துள்ளார். அந்த நிறுவனத்தில் தனக்குத்தான் உரிமை உள்ளது என்று குவிட்டன்தாசன் என்பவர் நீதிமன்றங்களில் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 2013- ஆம் ஆண்டு காவல்துறை விசாரணை நடத்தி, புகார் முடித்து வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த நிலையில், அதே புகார் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் வழக்குப் பதிவு செய்து, அந்த வழக்கை விசாரித்து வருவதாக மனுவில் தெரிவித்துள்ளார். அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும், விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிய மனு, இன்று (19/08/2020) நீதிபதி சதீஸ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் உள்நோக்கத்தோடு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ் குமார், வருகிற 24-ஆம் தேதி, வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இருப்பதாகவும், இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். வழக்கின் இறுதி விசாரணை வருகிற 31- ஆம் தேதி நடத்தப்படும். அது வரை இந்த வழக்கு தொடர்பாக ஜெகத்ரட்சகன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதே புகார் தொடர்பான, மத்திய அமலாக்கத்துறை அளித்த சம்மன் குறித்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மணிசங்கர் ஆஜராகி, நிறுவனம் முறைப்படி வாங்கியதாகவும், இது தொடர்பான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அமலாக்கத்துறை இந்த சம்மன் அனுப்பி உள்ளதாகவும், இது சட்டவிரோதம் என்றும் வாதிட்டார். அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லை என்றும் குறிப்பிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமலாக்கத்துறை சம்மனுக்கு நான்கு வாரம் தடை விதித்து, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.