ADVERTISEMENT

பெண் அதிகாரியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினர்

09:27 AM May 26, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட 200 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது சகோதரர் அசோக் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அரசு ஒப்பந்ததாரர்களின் அலுவலகம் மற்றும் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த கிராமமான இராமேஸ்வரப்பட்டி பகுதியில் 25 இடங்களிலும், கரூர் மாவட்ட திமுக ஒன்றிய செயலாளர், கிளைச் செயலாளர் ஆகியோர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், பாலக்காடு, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட இடங்களிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தமாக 200 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகப் பணம் வாங்கினார் எனும் வழக்கை உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெறலாம் எனச் சொல்லப்படுகிறது. சமீபத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகப் பணம் பெற்றார். இதனை உச்சநீதிமன்றம் விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது அதனால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ய வந்தனர். அப்போது அசோக் வீட்டில் இல்லாமல் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதன் காரணமாக அதிகாரிகள் அங்கு காத்திருந்தனர். அதற்குள் தகவல் கேள்விப்பட்டு அங்கு திமுகவினர் குவிந்தனர். சற்று நேரத்தில் அங்கு சோதனைக்கு வந்த பெண் அதிகாரிக்கும், அங்கிருந்த திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தில், சோதனை அதிகாரிகளில் ஒருவர் அங்கிருந்த திமுகவினரில் ஒருவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், திமுகவினர் ஒரு பெண் அதிகாரியை முற்றுகையிட்டு அடையாள அட்டையை காட்டச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடும் வாக்குவாதம் ஏற்பட்ட பிறகு அந்தப் பெண் அதிகாரி அவரது அடையாள அட்டையை காட்டினார். அதன்பிறகு அவரை அசோக் வீட்டிற்குள் அனுமதித்தனர். மேலும், அங்கு வாக்குவாதம் முற்றி அதிகாரியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் அங்கிருந்த வருமான வரித்துறை அதிகாரிகள் அசோக்கின் வீட்டில் சோதனை மேற்கொள்ளாமல் திரும்பிச் சென்றனர் எனச் சொல்லப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT