ADVERTISEMENT

2,500 ரூபாய் பொங்கல் பரிசைப் பார்த்து ஏமாந்து விட வேண்டாம்!- தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு... 

07:50 AM Jan 05, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT


ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசாக கொடுக்கப்படும் 2,500 ரூபாயைக் கண்டு மக்கள் ஏமாந்து விடக்கூடாது; அது, வரியாக நீங்கள் செலுத்திய பணம்தான் என்று தயாநிதி மாறன் எம்.பி. கூறினார். சேலத்தில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.

ADVERTISEMENT

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில், 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரை, சேலம் வடக்கு, தெற்கு தொகுதிகளில் திங்களன்று (ஜன. 4) நடந்தது. தயாநிதிமாறன் எம்.பி. பரப்புரையில் ஈடுபட்டார்.

வெங்கடாசலம் காலனியில் நெசவாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நெசவாளர்களின் குறைகளைக் கேட்டறிந்த தயாநிதி மாறன் எம்.பி., அவர்கள் மத்தியில் பேசியது: "நான் மத்திய ஜவுளித்துறை அமைச்சராக இருந்தபோது நெசவாளர்களுக்குப் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை செய்துள்ளேன். எனக்கு உங்களின் கஷ்டங்கள் புரியும். நெசவாளர்கள் அதிகமாக வசிக்கும் சேலத்தில் கூட ஜவுளிப் பூங்கா அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம், இதற்கு பெரும் முயற்சி எடுத்தார். ஆனால் ஆட்சி மாற்றத்தால் அத்திட்டம் கைவிடப்பட்டது. ஸ்டாலின் முதல்வர் ஆனவுடன் கண்டிப்பாக சேலத்தில் ஜவுளிப் பூங்கா கொண்டு வரப்படும்.

கரோனா ஊரடங்கால் நெசவாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்த நேரத்தில் நூல் விலையேற்றம் மிகப்பெரும் பிரச்சனையாக உள்ளது. முன்பு, சீனாவில் இருந்து பஞ்சு இறக்குமதி செய்யப்படுவதால் நூல் விலை உயர்ந்துள்ளதாக சொன்னார்கள். இப்போது குஜராத்தில் இருந்து நூல் வந்தும் விலை குறைந்தபாடில்லை. இந்த அரசின் திட்டங்கள் அனைத்தும் முதலாளிகளுக்கு மட்டுமே லாபமாக உள்ளது. இதனைப் போக்க தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நூல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நமது பிள்ளைகள் படித்தால்தான் நமது குடும்பம் உயரும். நம் தலைமுறைகள் படிக்க வேண்டும் என பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் விரும்பினர். ஸ்டாலினும் அதையே விரும்புகிறார். ஆனால், தற்போது இதற்கெல்லாம் வழியில்லாமல் போய்விட்டது. இன்று, இறைவன் அருளால் முதல்வர் ஆனதாக ஒருவர் சொல்கிறார். இன்னொருவர் தியானம் செய்து நியாயம் கேட்டார். இவர்கள் இருவரும் இணைந்து நடத்தும் ஆட்சியால் தமிழகம் 10 வருடம் பின்தங்கி விட்டது.

கலைஞர் ஆட்சியில், படித்தவுடன் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலை கிடைத்தது. இப்போதுள்ள அ.தி.மு.க. ஆட்சியில் தொழிற்சாலைகள் அனைத்தும் இழுத்து மூடப்படுகிறது. இந்திரா காந்தியிடம் போராடி கலைஞர் பெற்றுத்தந்த சேலம் இரும்பாலையும், இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தொடங்கப்பட்ட ஐடி பார்க்கும் முடங்கிக் கிடக்கின்றன. இதேபோல் நமது பிள்ளைகளின் மருத்துவ கனவும் கலைந்துவிட்டது. உயர்சாதிக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்கிறார் மோடி. அதற்கு ஆதரவாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

நீட் தேர்வு எழுதாத மாணவர்கள்தான் இன்று உலக அளவில் சிறந்த மருத்துவர்களாக உள்ளனர். அவர்கள்தான் மோடிக்கும் கூட சிகிச்சை அளித்தார்கள். தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற தேர்வுகள் கொண்டுவரப்படுகிறது. ஆனால் இந்த உரிமைகள் அனைத்தையும் எடப்பாடி பழனிசாமி விட்டுக்கொடுக்கிறார். அவர் மீது ஏராளமான ஊழல் புகார்கள் இருக்கின்றன. அதிலிருந்து தப்பிக்கவே மோடியின் சொல்லுக்கு எல்லாம் எடப்பாடி பழனிசாமி தலையாட்டுகிறார்.

கரோனா காலத்தில் மக்கள் படும் கஷ்டங்களைப் போக்க 7,000 ரூபாய் நிவாரணம் கொடுக்க வேண்டும் என்றார் ஸ்டாலின். அப்போது கஜானா காலி என்று கைவிரித்தார் எடப்பாடி. இப்போது ரேஷனில் பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் கொடுக்கிறார். இது வரியாக நாம் செலுத்திய பணம்தான். இதைத்தான் நமக்குக் கொடுக்கிறார்கள். 10 ஆண்டுகளாக அவர்களை நம்பி ஏமாந்துவிட்டோம். எனவே உங்கள் பணத்தை வாங்கும் நீங்கள், அதில் மயங்கி ஏமாந்துவிடாதீர்கள். ஸ்டாலினுக்கு வாக்களித்து அவரை முதல்வராக்குங்கள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் வீணாகிவிடும்.

கடந்த 10 ஆண்டுகளில் எந்த தொழிற்சாலைகளும் தொடங்கப்படவில்லை. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் இல்லை. இன்னும் நான்கு மாதத்தில் நீங்கள் செலுத்தும் வாக்கால் இதற்கு விடிவுகாலம் பிறக்கும். தமிழகம் நிச்சயம் முன்னேற்றம் காணும்.” இவ்வாறு தயாநிதி மாறன் பேசினார்.

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பகுதி செயலாளர் கேபிள் ராஜா, மாவட்ட அவைத்தலைவர் கலையமுதன், பொருளாள் சுபாஷ், மாநகர செயலாளர் ஜெயக்குமார், தீர்மானக்குழு உறுப்பினர் தாமரைக்கண்ணன், நெசவாளர் அணி துணை அமைப்பாளர் 'அசோக் டெக்ஸ்' அசோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT