ADVERTISEMENT

நிலக்கோட்டையை கைப்பற்றிய திமுக... புலம்பும் அதிமுக!

07:45 PM Jan 21, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு அதிமுக தலைவர் ரெஜினா நாயகம் மற்றும் துணைத்தலைவர் யாகப்பன் ஆகியோர் மீது திமுக ஒன்றிய கவுன்சிலர் லலிதா மணிகண்டன் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார்.

அதைத்தொடர்ந்து திண்டுக்கல் கோட்டாட்சியர் காசிசெல்வி தலைமையில் வட்டாட்சியர் தனுஷ்கோடி முன்னிலையில் நிலக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக தரப்பு கவுன்சிலர்கள் பங்கேற்றனர். பெரும்பான்மையான கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று மறைமுக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்காக வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு ஒன்றிய கவுன்சிலர்கள் தனித்தனியாக வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இருதரப்பு கவுன்சிலர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக திமுக கவுன்சிலர்களும், நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக அதிமுக கவுன்சிலர்களும் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி கூறிக்கொண்டு கூட்டத்தை விட்டு வெளியேறினார்கள்.

ஆனால் துணைத்தலைவர் யாகப்பனோ, திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துவிட்டது என்றார். அதுபோல் திமுக ஒன்றிய கவுன்சிலர் லலிதாமணிகண்டனோ, பெரும்பான்மையான கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதால் திமுக வெற்றி பெற்று யூனியன் தலைவர் பதவியைக் கைப்பற்றி இருக்கிறது என்றார். இந்தநிலையில் அங்கு நிலவிய பதட்டமான சூழ்நிலை காரணமாக வாக்குப்பெட்டிகளை அதிகாரிகள் மாவட்ட முகாமுக்கு எடுத்துச் சென்றனர்.

இதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெறலாம் என குற்றம்சாட்டி அதிமுக நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி தலைமையில் அக்கட்சியினர் மதுரை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் அங்கு பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீஸாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் நிலவியது. நிலக்கோட்டை ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து எந்த முடிவும் அறிவிக்கப்படாததால் நிலக்கோட்டையில் தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. அதை தொடர்ந்து போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT