ADVERTISEMENT

தரமற்ற பலகாரங்கள் தயாரித்தால் 5 லட்சம் ரூபாய் அபராதம்

08:06 AM Oct 11, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தீபாவளி பண்டிகையையொட்டி தயாரிக்கப்படும் இனிப்பு, காரம் உள்ளிட்ட பலகாரங்கள் தரமற்றதாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் எச்சரித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம், சேலத்தில் திங்கள்கிழமை (அக். 10) நடந்தது.

மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் கூறியதாவது, "தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு, காரம் உள்ளிட்ட பலகாரங்கள் விற்பனை அதிகளவில் இருக்கும். அனைத்து இனிப்பு விற்பனை கடைகள், தயாரிப்புக் கூடங்களை கண்காணித்து வருகிறோம்.

இனிப்பு, காரங்களை கிப்ட் பாக்ஸ்களில் வழங்கப்படும்போது, அந்த பெட்டியின் மீது தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்களை கட்டாயம் அச்சிட வேண்டும்.

உணவு பாதுகாப்புத்துறையின் உரிமம் இல்லாமல் பலகார தயாரிப்பில் யாரும் ஈடுபடக் கூடாது. நுகர்வோரை கவர்வதற்காக பலகாரங்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் செயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்தக் கூடாது.

தரமற்ற பலகாரங்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். பண்டிகையையொட்டி தயாரிக்கப்படும் இனிப்பு, காரம் உள்ளிட்ட பலகாரங்களின் தரத்தைக் கண்காணிக்க 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. தரமற்ற உணவுப்பொருள் தயாரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இந்த கூட்டத்தில், இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிறமூட்டிகளை எந்தளவிற்கு சேர்க்கப்பட வேண்டும், நச்சுத்தன்மை உள்ள பொருள்கள், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி விவரங்கள் மட்டுமின்றி லேபிளில் இடம்பெற வேண்டிய வேறு விவரங்கள் குறித்தும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆலோசனை வழங்கினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT