ADVERTISEMENT

திவாகரன் இல்ல திருமணம்... உறவுகள் புறக்கணிப்பு ஏன்?

07:12 PM Mar 05, 2020 | kalaimohan

5 வருடங்களுக்கு முன்பு அதிமுகவின் அதிகார மையமாக இருந்த மன்னார்குடி. ஜெ.வின் கோபத்தின் பார்வையில் பட்டபிறகும் கூட அதே நிலையில் இருந்தது. ஆனால் ஜெ.மறைவுக்கு பிறகு அதிகார மையம் உடைந்து சின்னாபின்னமாகிவிட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிகார மையத்தின் முதன்மையானவர் சசிகலா. ஜெ.மறைவுக்கு பிறகு அவரது கணவர் நடராஜன், செல்லத் தம்பி திவாகரன் ஆகியோர் சொல்லியும் கூட கேட்காமல் கட்சி, ஆட்சியை கைப்பற்றலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறியே அவரை சிறைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் ர.ர.க்களே. அந்த சந்தர்ப்பத்தில் மீண்டு எழுந்தவர் தினகரன். அவருக்கு துணையாக அவரது மச்சான் டாக்டர் வெங்கசேடன் வர அதிமுக உடைந்து தனி அணியாகி. பிறகு அமமுக என்றானது. அதுவரை தினகரனுக்கு பக்கபலமாக இருந்து தனது ஆதரவாளர்களை தனி அணியில் சேர்த்த திவாகரனுக்கும் தினகரனுக்கும் கருத்துவேறுபாடுகள் எழ.. அ.ம.மு.க என்ற கட்சியில் திராவிடம் இல்லை என்று சொல்லி அண்ணா திராவிடர் கழகத்தை உருவாக்கி கட்சிக்கு தலைவர் ஆகிவிட்டார்.


அ.தி.க கட்சி தொடங்கும் போது சசிகலா பெயரையும், படத்தையும் பயன்படுத்தியதால் சிறையில் இருந்த சசிகலா அந்த கட்சிக்கும் எனக்கும் தொடர்பில்லை. எங்களுக்குள் எந்த உறவும் இல்லை என்பது போல வழக்கறிஞர் மூலம் அறிக்கை கொடுத்தார். அதன் பிறகு திவாகரனும் சசிகலாவை தனது முன்னாள் சகோரி என்று பிரஸ்மீட் கொடுத்தார்.

தொடர்ந்து அ.தி.க – அ.ம.மு.க தனித் தனிக் கட்சியாக செயல்படத் தொடங்கியது. திவாகரனிடம் இருந்தும் அ.ம.மு.க வுக்கு போனவர்கள் அங்கேயே தங்கிவிட்டதுடன். பலர் அ.தி.மு.க வுக்கும் போய்விட்டனர். திவாகரனும் – தினகரனும் பொது இடங்களில் கடுமையான விமர்சனங்களை வைத்துக் கொண்டனர். இதனால் மேலும் குடும்பத்திற்குள் விரிசல் ஏற்பட்டுவிட்டது. சசிகலாவின் கணவர் ம.நடராஜன் இறந்த போது அனைவரும் வந்து தனித்தனியாக கலந்து கொண்டாலும் ஒட்டிக் கொள்ளவில்லை. அதன் பிறகும் வேற்றுமை அதிகமானது.

இந்த நிலையில் திவாகரன் மகன் ஜெயானந்த்க்கு ஜெ.வின் முன்னாள் வளர்ப்பு மகனும், தினகரன் சகோதரர் பாஸ்கரன் மகள் ஜெயாஸ்ரீக்கும் திருமணம் நிச்சயக்கப் பெற்று திருமணத்திற்கு உறவுகள் அனைவரும் வரவேண்டும் என்று திவாகரன் பத்திரிக்கை கொடுத்து அழைத்திருந்தார். சசிகலாவுக்கும் அழைப்பு கொடுத்து பரோலில் வர வேண்டும் என்று அழைத்திருந்தார்.

இதை அறிந்த தினகரன்.. கடந்த மாதம் தஞ்சை எம்.பி. பழநிமாணிக்கம் தம்பி மகன் திருமணத்தில் கலந்து கொண்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என்ற ரீதியில் பேசிய வீடியோவை சசிகலாவுக்கு காட்டி அவரை பரோலில் வரவிடாமல் தடுத்ததுடன் தனது உறவுகளை அனைவரையும் வரவிடாமல் தடுத்துவிட்டார். இளவரசி மகன் விவேக் மணமகன் ஜெயானந்த் மீது பற்றுக் கொண்டவர் என்றாலும் அவரும் கலந்து கொள்ளவில்லை.அ.ம.மு.க வினரும் வரவில்லை.

அதேபோல ம.நடராஜன் உறவுகளும் காணவில்லை. அதில் கலந்து கொண்ட ஒரே உறவு டாக்டர் வெங்கடேசன் மட்டுமே. அவருக்கும் தினகரனுக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு எற்பட்ட பிணக்கு காரணமாகவே வெங்கடேசன் கலந்து கொண்டார். ஒட்டு மொத்த உறவுகளும் புறக்கணித்த போது டாக்டர் வெங்கடேசனும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த உறவுகளும் கலந்து கொண்டதில் மகிழ்ச்சியடைந்தார் திவாகரன்.


ஆனால் தி.மு.க வினர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். தி.மு.க எம்.எல்.ஏக்கள் ஒரத்தநாடு புல்லட் ராமச்சந்திரன், மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா, ஆகியோர் கலந்து கொண்டனர். மேடையில் மணமக்களுடன் நின்ற புல்லட் ராமச்சந்திரன் படம் எடுங்கப்பா என்று சொல்லி புகைப்படம் எடுத்த பிறகே அங்கிருந்து அகன்றார். சமீபத்தில் அ.ம.மு.க வில் இருந்து தி.மு.க வில் இணைந்த மணமேல்குடி பரணி கார்த்திகேயன் சாப்பாட்டு பந்தல் பொறுப்பை ஏற்றுக் கொண்டு செய்தார். நாகை எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி, பி.ஆர்.பாண்டியன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அதே நேரத்தில் 9 ந் தேதி சென்னையில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் அதில் அ.தி.மு.கவினர் மற்றும் தி.மு.க தலைவர்கள் கலந்து கொள்ள வாய்ப்புகள் உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT