ADVERTISEMENT

குடிபோதையில் பணிக்கு வந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் பணியிடைநீக்கம்... 'வாய் நீண்ட' நடத்துநரும் சிக்கினார்!

07:44 AM Oct 08, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலத்தில், பணியின்போது ஒழுங்கு விதிகளை மீறி செயல்பட்டதாக அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மெய்யனூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓட்டுநர் கர்ணன் பணிக்கு வந்துள்ளார். அப்போது அவர் புறநகர் பேருந்தை இயக்கச் சென்றார்.

பணிமனைக் காவலர்கள், ஓட்டுநரை நிறுத்தி வழக்கமான சோதனைகளைச் செய்தனர். இதில், அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக சேலம் மண்டல போக்குவரத்து அலுவலர்களுக்கு விசாரணை அறிக்கை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பணிக்கு குடிபோதையில் வந்த ஓட்டுநர் கர்ணனை பணியிடைநீக்கம் செய்து போக்குவரத்துக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது.

இதேபோல், சேலம் வேடுகாத்தாம்பட்டியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாதம்மாள் (வயது 55), கடந்த செப். 22ஆம் தேதி மாலை அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் சேலம் செல்வதற்காக காத்திருந்தார். அப்போது வந்த அரசு நகரப் பேருந்தில் தடுமாறி ஏறினார். அவரை நடத்துநர் கோவிந்தராஜ் ஒருமையிலும், கண்ணியக்குறைவாகவும் பேசியுள்ளார். இதனால் மாதம்மாள், கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேலம் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு நலச்சங்க மாவட்டத் தலைவர் சீனிவாசன், எருமாபாளையம் பணிமனை கிளை மேலாளர் அருள்முருகனிடம் புகார் அளித்தார்.

மேலும், அக். 4ஆம் தேதி நடத்துநர் கோவிந்தராஜை கண்டித்து பணிமனை முன்பு சீனிவாசன் தலைமையில் போராட்டமும் நடந்தது. அதையடுத்து, நடத்துநர் கோவிந்தராஜும் உடனடியாக தற்காலிக பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

பணியில் அலட்சியமாகவும், விதிகளை மீறியும் செயல்படும் ஊழியர்கள் மீது எடுக்கப்பட்டுவரும் அதிரடி நடவடிக்கைகளால் மெத்தனமாக செயல்படும் அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT