ADVERTISEMENT

மாற்றுத்திறனாளி சந்தேக மரணம்! மூன்று போலீஸார் மீது பாய்ந்த நடவடிக்கை! 

10:52 AM Jan 16, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், கருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 45). மாற்றுத்திறனாளியான இவரை திருட்டு வழக்கில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் போலீசார் கடந்த 11ஆம் தேதி கைது செய்து, அந்த மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், 12ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவர் அன்று இரவே உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து பிரபாகரன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து 14ஆம் தேதி சேலம் ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் கார்மேகம் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. நாமக்கல் மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் தாக்கூர், சேலம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ், இறந்தவரின் மனைவி ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். அதில் இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம், அரசு வேலை, போலீசார் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலை பெறுவோம் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இது தொடர்பாக பிரபாகரனின் சகோதரர் சக்திவேல் சேலம் அரசு மருத்துவமனை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று சேலம் 1வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் கலைவாணி, அரசு மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து பிரேத பரிசோதனையும் நடந்தது.

அதேசமயம், பிரபாகரனுக்கு ஆதரவாக விசிகவின் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு செயலாளர் சௌ.பாவேந்தன் மற்றும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் அரசு மருத்துவமனைக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரைப்படி திருச்செங்கோடு தாலுகா முதல்நிலை காவலர் குழந்தைவேல், புதுச்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் பூங்கொடி, சேந்தமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து மேற்கு சரக ஐ.ஜி. பொறுப்பில் உள்ள சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் நஜ்மல் கோடா உத்தரவிட்டார்.

இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ள பிரபாகரனின் உடலை பெற்றுக்கொள்ள அவரது உறவினர்கள் சம்மதித்துள்ளனர். அவரது உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதையொட்டி அரசு மருத்துவமனையில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT