ADVERTISEMENT

உள்ளாட்சித் தேர்தல்... ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திண்டுக்கல் சீனிவாசன்

08:48 AM Nov 16, 2019 | santhoshkumar

அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் உள்ள ஆளும் கட்சியும் எதிர்க் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு கட்சி்க்காரர்களிடம் விருப்பமனு வாங்கி வருகிறார்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதுபோல் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு மாநகராட்சி, மூன்று நகராட்சி உள்பட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஆளுங்கட்சி சார்பில் திண்டுக்கல்லில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு கொடுக்கப்பட்டது. அந்த விருப்ப மனுக்களை மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் இருக்கும் ஆளுங்கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு வாங்கி, யார்? யார்? எந்தெந்த பதவிக்கு போட்டி போடுகிறார்கள் என்பதை பூர்த்தி செய்து கொடுத்தனர்.

இதில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதால் மாவட்ட செயலாளரும் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவருமான மருதராஜ் மகள் பொன்முத்து மேயர் பதவிக்கு போட்டி போடுவதற்காக விருப்பமனுவை வாங்கி, அதை பூர்த்தி செய்து தேர்தல் பொருப்பாளரான வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் வழங்கினார். அதுபோல் பகுதி கிளை செயலாளர்கள் 48 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு போட்டிபோடும் கட்சிக்காரர்கள், விருப்ப மனுக்களை அந்தந்த பகுதி பகுதி செயலாளர்களிடம் பூர்த்தி செய்து கொடுத்தனர்.

இதில் கலந்துகொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணைமுதல்வர் ஓபிஎஸ்ஸின் உத்தரவின்பேரில், தமிழகம் முழுவதும் இரண்டு நாட்களுக்கு உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் கட்சிக்காரர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆட்சியில் எது நடந்தாலும் அதற்கு எதிராக பேசுவதுதான் ஸ்டாலினின் வேலை. மூன்று வருடமாக உள்ளாட்சித் தேர்தல் நடக்காமல் இருப்பதற்கு ஸ்டாலின்தான் காரணம். கடந்த முறை உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு கட்சிக்காரர்கள் ஓட்டு கேட்டு கொண்டிருக்கும் வேளையில் ஸ்டாலின் கோர்ட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறக் கூடாது என தடை வாங்கி விட்டார். அதனால்தான் உள்ளாட்சித் தேர்தல் நின்று போய்விட்டது. அதன்பின் முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் முயற்சியினால்தான் மீண்டும் உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருக்கிறது. இதை நிறுத்துவதற்கு ஸ்டாலின் எந்த ஒரு முயற்சியும் எடுக்க வேண்டாம் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இந்த ஆட்சியில் எந்த குறையும் இல்லை. அந்த அளவுக்கு முதல்வரும் துணை முதல்வரும் ஆட்சி செய்து வருகிறார்கள். வருகிற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் முழுமையாக வெற்றி பெறுவோம். நாங்குநேரி, விக்கிரவாண்டி இரண்டு இடைத்தேர்தலின் மூலம் எழுச்சி அடைந்திருக்கிறோம். ஆனால் திமுக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் அதிகாரி மாற்றப்பட்டது, நிர்வாகம் சரியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மாற்றியிருக்கிறார்கள். அதுபோல் முதல்வரும் துணை முதல்வரும் ஆளுமைமிக்க தலைவர்களாக ஒரு சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார்கள் என்பது தான் உண்மை” என்று கூறினார்

இந்தப் பேட்டியின் போது முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன். மாவட்ட செயலாளர் மருதராஜ். வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்புரத்தினம். திண்டுக்கல் நகர கூட்டுறவு வங்கி தலைவர் பிரேம். அபிராமி கூட்டுறவு வங்கி தலைவர் பாரதி முருகன் உள்பட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT