ADVERTISEMENT

 ஸ்வட்ச் பாரத் அபியான் திட்டம்; தனிநபர் கழிப்பறைகள் கட்டப்பட்டு திறப்புவிழா காணும் முன் இடிந்து விழும் அவலம்!

07:48 PM Jun 01, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியத்தில் காந்திகிராமம், தொப்பம்பட்டி, வீரக்கல், அம்பாத்துரை, என்.பஞ்சம்பட்டி, மணலூர், சித்தரேவு, ஆத்தூர், அய்யங்கோட்டை உட்பட 22 கிராம ஊராட்சிகள் உள்ளன. பாரத பிரதமரின் ஸ்வட்ச் பாரத் திட்டம் மூலம் தனிநபர் கழிப்பறைகள் கிராம ஊராட்சிகளில் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கழிப்பறைகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பயனாளிகள் மூலம் கட்டாமல் ஒப்பந்த அடிப்படையில் கழிப்பறை ஒன்றுக்கு ஆயிரம் முதல் ஆயிரத்து ஐநூறு வரை கமிசன் வாங்கிக் கொண்டு தனிநபர்களுக்கு கட்ட ஒப்பந்தம் வழங்கியதால் இந்த கழிப்பறை திட்டம் இடிந்து விழும் திட்டமாக மாறி வருகிறது.

ADVERTISEMENT


குறிப்பாக அரசு நிர்ணயித்தபடி கழிப்பறைகளை கட்டாமல் தங்கள் இஷ்டம் போல் தனிநபர் கழிப்பறைகளை கட்டிக் கொடுத்துள்ளனர். ஒரு சில ஊராட்சிகளில் செப்டிக் டேங்க் இல்லாமல் கட்டிக் கொடுத்துள்ளனர். ஒருசில ஊராட்சிகளில் கதவுகள் பொருத்தாததால் பயனாளிகள் கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆத்தூர், போடிக்காமன்வாடி, பாறைப்பட்டி, வீரக்கல், பாளையன்கோட்டை ஆகிய ஊராட்சிகளில் கட்டப்பட்ட கழிப்பறைகளில் 50சதவிகிதத்திற்கு மேல் பயனாளிகள் பயன்படுத்த முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. கமிசனுக்காக கட்டப்படும் கழிப்பறை என்பதால் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் சுடுகாட்டிற்கு செல்லும் வழியிலும் இரவு நேரத்தில் யாரும் செல்லாத இடத்திலும் கழிப்பறைகளை கட்டிக் கொடுத்துள்ளனர்.

தனிநபர் கழிப்பறையை கூட்டுக் கழிப்பறையாக மாற்றிய பெருமை ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை சேரும். இவ்வாறு கட்டப்படும் கூட்டுக் கழிப்பறைகளுக்கு முறையாக தண்ணீர் வசதி, விளக்கு வசதி இல்லாததால் திறப்பு விழா கண்டும் பயனாளிகள் இரவு நேரங்களை பயன்படுத்தாமல் சாலை ஓரங்களை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். போடிக்காமன்வாடி, பாளையன்கோட்டை, வீரக்கல், எஸ்.பாறைப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் கூட்டுக் கழிப்பறைகள் பயன்பாட்டிற்கு வருவதற்கு இடிந்து விடுகின்றன.

வீரக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளமாலைப்பட்டியில் ஊரில் இருந்து கோனூருக்கு செல்லும் வழியில் இருபது பயனாளிகளுக்கு கூட்டுக் கழிப்பறைகளாக கட்டி கொடுத்துள்ளனர். பயனாளிகளிடம் ஒப்படைப்பதற்கு முன்பு கழிப்பறைகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்து சுக்குநூறாய் உடைந்துவிட்டன. மேலும் கட்டிடங்களும் விரிசல் அடைந்து வருகின்றன. கழிப்பறைகள் வானம் பார்த்த கழிப்பறைகளாய மாறிவிட்டன.

ஊராட்சிகளில் கட்டிக்கொடுக்கப்பட்ட கழிப்பறைகளுக்கு செப்டிக் டேங்க் வசதி முறையாக இல்லாததால் கிராம மக்கள் சிலர் ஆடு, கோழிகளை அடைத்து வைக்கும் கூடாரங்களாக மாற்றி உள்ளனர். இதுபோல பல கிராம ஊராட்சிகளில் கட்டப்படும் தனிநபர் கழிப்பறைகளின் முறைகேடுகள் மற்றும் மோசடிகள் குறித்து ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை புகார் செய்தாலும் கண்டுகொள்வதில்லை என பயனாளிகள் குறை கூறுகின்றனர். இதுதவிர புகார் செய்யும் பயனாளிகள் மீது அதிகாரிகள் கோபப்படுவதாகவும் கூறப்படுகிறது.


இதுகுறித்து விசாரிக்கையில் மாவட்ட ஆட்சியருக்கு நெருக்கமான அதிகாரிகள் வரிசையில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அதிகாரிகளும் இருப்பதால் மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து கண்டுகொள்வதில்லை என ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் சிலர் கூறுகின்றனர். பாரத பிரதமர் நரேந்திர மோடி தூய்மையான இந்தியாவை உருவாக்க எத்தனை தூய்மை இந்தியா திட்டம் கொண்டு வந்தாலும் ஆத்தூர் ஒன்றியத்தில் அத்திட்டம் முடங்கி போய் விடும் என்பதற்கு இந்த தனிநபர் கழிப்பறைகளின் நிலைமையே சாட்சி. மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய், திட்ட இயக்குநர் கவிதா, ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் சென்று தனிநபர் கழிப்பறைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT