style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சேலம் அருகே, காதல் கணவன் வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் ஏமாற்றம் அடைந்த இளம்பெண் திருமணம் ஆன மூன்றே நாளில் புகுந்த வீட்டில் இருந்து வெளியேறினார். இதனால் மனம் உடைந்த புது மாப்பிள்ளை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்டகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சிவாஜி. கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி நல்லம்மாள். இவர்களுக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் செல்லதுரை (26). சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
செல்லதுரையும், அவருடன் ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வந்த சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். இருதரப்பு பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். புதுமணத் தம்பதிகளுக்கு பெண் வீட்டில் விருந்து உபசரிப்புகள் தடபுடலாக இருந்தது.
இதையடுத்து காதல் மனைவியை தன் வீட்டிற்கு செல்லதுரை அழைத்துச் சென்றார். செல்லதுரை வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததைக் கண்டு அவருடைய மனைவி மன உளைச்சலுக்கு ஆளானார். கழிப்பறை இல்லாத வீட்டில் என்னால் ஒருநாள் கூட வாழ முடியாது என்று கணவரிடம் அழுது புலம்பினார். மேலும், அதே வேகத்தில் அவர் சேலத்தில் உள்ள தன் பெற்றோர் வீட்டுக்கும் தனியாக கிளம்பிச் சென்றுவிட்டார். அன்று மாலையில் மனைவியை அழைத்து வர செல்லதுரை தன் மாமியார் வீட்டுக்குச் சென்றார். அவரை எவ்வளவோ சமாதானம் செய்தும், கழிப்பறை கட்டி முடிக்கும் வரை தன்னால் அங்கு வர முடியாது. கழிப்பறை கட்டிய பிறகு வந்து அழைத்துச்செல்லும்படி கூறி செல்லதுரையுடன் செல்ல மறுத்துவிட்டார்.
இதனால் கடும் விரக்தியுடன் செல்லதுரை மட்டும் வீடு திரும்பினார். வீட்டிற்கு வந்த பிறகும் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்துள்ளார்.நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற செல்லதுரை மீண்டும் வீடு திரும்பவில்லை. அவருடைய பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். அவருடைய நண்பர்கள், உறவினர்களுக்கு, உடன் வேலை செய்து வந்தவர்களுக்கெல்லாம் செல்போன் மூலம் விசாரித்தனர். செல்லதுரை சென்ற இடம் தெரியவில்லை.
இந்த நிலையில் வீ¤ட்டில் இருந்து செல்லதுரை எழுதிய கடிதத்தை பெற்றோர் கண்டுபிடித்தனர். அந்தக் கடிதத்தில், ''அம்மா, அப்பா மன்னிக்கவும். தவறு செய்து விட்டேன். தற்கொலை செய்து கொள்கிறேன். எனது மனைவி மற்றும் நண்பர்களை தொந்தரவு செய்யாதீர்கள்,'' என்று எழுதி வைத்திருந்தார். மகனைக் காணாமல் பல இடங்களிலும் மீண்டும் தேடினர்.
இன்று (செப். 27, 2018) காலை, கோட்டகவுண்டன்பட்டி பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் சடலம் மிதப்பதாக அப்பகுதி பொதுமக்கள் சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றினர். சடலமாகக் கிடந்தது செல்லதுரை என்பது தெரிய வந்தது. தகவல் அறிந்து வந்த பெற்றோர் சடலமாகக் கிடக்கும் மகனைப் பார்த்து, நெஞ்சு நெஞ்சாக அடித்துக்கொண்டு கதறி அழுதனர். பிரேத பரிசோதனைக்காக செல்லதுரையின் சடலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
காதல் திருமணம் செய்த மூன்றாவது நாளிலேயே புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.