ADVERTISEMENT

மாயமான மாணவி; 9 மாதங்கள் தேடிய காவல்துறை! எலும்புக்கூடாக இருந்த கொடூரம் 

03:38 PM Feb 18, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரூர் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பள்ளி மாணவியின் உடல், காட்டின் மையப் பகுதியில் எலும்புக் கூடுகளாகக் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள எஸ்.அம்மாபாளையம் முள்ளிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பெருமாள். இவருடைய மகள் ஞான சௌந்தர்யா கோயம்புத்தூரில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். பொதுத் தேர்வை முடித்துவிட்டு தனது சொந்த கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு வந்து பங்கேற்றுள்ளார்.

திருவிழா நடைபெற்றபோது ஞான சௌந்தர்யா காணாமல் போனதாகவும், தனது மகளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்து அவருடைய பெற்றோர் கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளனர். காவல்துறையினரும், ஞானசௌந்தர்யாவின் உறவினர்களும் கோயம்புத்தூர், திருப்பூர், அரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடியும் மாணவி குறித்து எந்த ஒரு தகவலையும் சேகரிக்க முடியவில்லை. தன்னுடைய மகள் உயிரோடுதான் எங்கோ, யாருடைய பாதுகாப்பிலோ இருப்பதாக நம்பிக்கையுடன் இருந்திருக்கிறார் பெருமாள். ஆனால் அவரது நம்பிக்கையில் இடி விழுந்தது போன்ற ஒரு செய்தி ஒன்பது மாதங்களுக்குப் பிறகு கிடைத்தது.

பெருமாளின் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், எஸ்.அம்மாபாளையம் அருகே உள்ள மலைப்பகுதியில் ஒரு சடலம் தூக்கில் தொங்கியபடி இருப்பதாகவும் ஆனால் உடலில் தசைப்பகுதிகள் எதுவும் இல்லாமல் எலும்புக்கூடுகளாக மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பதற்றமான பெருமாள், அந்த எலும்புக்கூடு உருவம் தனது மகளாக இருந்திடக்கூடாது என்ற வேண்டுதலுடன் சென்று பார்த்ததும் அதிர்ந்தார். அவருடன் சென்ற உறவினர்களும் அந்த எலும்புக்கூடு உருவம், ஞான சௌந்தர்யா தான் என்பதை கண்ணீருடன் உறுதி செய்தனர்.

இது குறித்து கோட்டப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பெயரில் மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டு சோதனை செய்து, அங்கிருந்த எலும்புக் கூடுகள், கையில் அணிந்திருந்த வாட்ச் உள்ளிட்டவற்றை சேகரித்து டி.என்.ஏ. சோதனை மற்றும் உடற்கூராய்விற்காக எடுத்துச் சென்றனர். இந்த மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால், இது கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக மாணவியோடு பயின்ற தோழிகள், உறவினர்கள் மற்றும் அனைவரிடமும் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

9 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன பெண்ணின் உடல் இவ்வளவு காலமாக அங்கே உயிரில்லாமல் தொங்கிக் கொண்டிருந்த செய்தி, அப்பகுதி மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT