ADVERTISEMENT

லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர்; வசமாகப் பிடித்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ்

11:13 AM Jun 22, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் டி.எஸ்.பி. சந்திரசேகரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியரை கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த வெட்டியார்வெட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர், ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், தண்டலையைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தன் நிலத்தை பட்டா மாற்றம் செய்வதற்காக இணைய வழியில் விண்ணப்பித்துள்ளார்.

அதனையடுத்து சுரேஷ், சரவணனை நேரில் சந்தித்து பட்டா மாற்றம் செய்து தருமாறு கேட்டுள்ளார். அதற்கு துணை வட்டாட்சியர் சரவணன், பட்டா மாற்றம் செய்வதற்கு ரூ. 10,000 லஞ்சமாக கேட்டுள்ளார். தன் நிலத்தை பட்டா மாற்றுவதற்கு லஞ்சமா என சுரேஷ், அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதன்பின் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சுரேஷிடம் கொடுத்து சரவணனிடம் கொடுக்கச் செய்துள்ளனர்.

அந்த ரூபாய் நோட்டுகளை சுரேஷ், சரவணனிடம் கொடுக்கச் சென்றபோது, சாம்பசிவம் மற்றும் வீரா ஆகிய இருவர் இடைத்தரகர்களாக செயல்பட்டுள்ளனர். அவர்களிடம் பணம் கைமாறி துணை வட்டாட்சியர் சரவணனிடம் பணம் சென்று சேரும் வரை டி.எஸ்.பி. சந்திரசேகரன் தலைமையில், ஆய்வாளர் கவிதா மற்றும் உதவி ஆய்வாளர்கள் பவுன்ராஜ், ரவி அடங்கிய குழுவினர் பொறுமையாக இருந்தனர். பிறகு மூவரையும் கையும் களவுமாக பிடித்தனர். அதன்பிறகு அவர்கள் மூவரிடம் சுமார் நான்கு மணி நேரம் விசாரணை நடத்தி அவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்களை நீதிமன்ற உத்தரவின்படி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT