/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3033.jpg)
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள செங்கராயன் கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சச்சிதானந்தம். இவருக்கு சொந்தமான விவசாய நிலம் ஒன்று 1974 ஆண்டு வரை அவரது பெயரில் பட்டாவாக இருந்துள்ளது. அதன் பிறகு வருவாய்த் துறையினரின் குளறுபடியால் சச்சிதானந்தத்தின் நிலத்தை அரசின் தரிசு புறம்போக்கு நிலம் என்று ஆவணத்தை மாற்றி உள்ளனர்.
சமீபத்தில் கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று தன் பெயருக்கு சிட்டா அடங்கல் தருமாறு கேட்டுள்ளார். அப்போதுதான் அவரது நிலம் அரசு தரிசு புறம்போக்காக மாற்றப்பட்டுள்ளது என்பது சச்சிதானந்தத்திற்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சச்சிதானந்தம், அந்த சொத்தின் மூல ஆவணங்களை ஆதாரங்களாக காட்டி மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதியிடம் தனக்கு சொந்தமான நிலத்தை அரசு தரிசாக மாற்றப்பட்டுள்ளது அதை மீண்டும் தன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தருமாறு மனு அளித்துள்ளார். அவரது மனுவை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர் விசாரணை செய்து அவரது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தருமாறு பரிந்துரை செய்துள்ளார்.
இந்த பரிந்துரை கடிதம் ஏலாக்குறிச்சி பகுதி கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ், வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோரிடம் வந்து சேர்ந்து. அவர்கள் இருவரும் விவசாயி சச்சிதானந்தத்திற்கு தகவல் அளித்து விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் தங்கள் அலுவலகத்திற்கு வந்து தங்களை சந்திக்குமாறு தகவல் அனுப்பி வரவழைத்துள்ளனர். அதன்படி சச்சிதானந்தம் நிலம் தனக்கு சொந்தமானது என்பதற்கு ஆதாரமான பத்திரம் மற்றும் ஆவணங்களை எடுத்துக்கொண்டு வருவாய் ஆய்வாளர் செந்தில்குமாரை ஏலாக்குறிச்சியில் உள்ள அவரது அலுவலகத்திற்கு சென்று சந்தித்துள்ளார்.
அங்கே கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜனும், செந்தில்குமாரும் இருந்துள்ளனர். அவர்கள் இருவரும், சச்சிதானந்தம் பெயருக்கு அவரது நிலத்தை மீண்டும் பட்டா மாற்றம் செய்து தர தங்களுக்கும் அலுவலக செலவுக்கும் என ஒரு லட்ச ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சச்சிதானந்தம், இது குறித்து அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அவரிடம் விசாரணை செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அதன் பிறகு சச்சிதானத்திற்கு ஆலோசனை வழங்கினர்.
அதில், ஒரு லட்ச ரூபாய் லஞ்சமாக பணம் தருவதாக ஒப்புக்கொள்ள செய்து அதற்கு முதல் தவணையாக 20,000 ரூபாய் பணத்தைக் கொண்டு போய் கொடுக்குமாறு சச்சிதானந்திடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த பணத்தில் ரசாயன பவுடர் தடவி கொடுத்து அனுப்பி உள்ளனர். அதன்படி நேற்று ஏலாக்குறிச்சியில் உள்ள வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் அலுவலகத்திற்கு சென்ற சச்சிதானந்தம், ஆய்வாளர் செந்தில்குமாரிடம் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். அவரது அருகிலேயே கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் உடன் இருந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சந்திரசேகர் தலைமையிலான போலீசார் வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)