ADVERTISEMENT

காய்ச்சலா மருத்துவரை பாருங்கள்... டெங்கு விழிப்புணர்வு பணியில் ரஜினி மக்கள் மன்றம்! 

02:10 PM Oct 20, 2019 | santhoshb@nakk…

வேலூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து டெங்கு காய்ச்சல் மரணங்கள் நிகழ்கின்றன. நான்கு வயதான பள்ளி மாணவி நட்சத்திரா உட்பட பெரியவர்கள், சிறியவர்கள் என்கிற வித்தியாசமில்லாமல் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்கள். மாவட்ட நிர்வாகம் 800- க்கும் குறைவானவர்களே டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள் என்கிறது. பொதுமக்கள் தரப்பிலோ ஆயிரக்கணக்கானவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்கிறார்கள். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது. மாவட்ட காவல்துறையும் டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வாகன ஓட்டிகளுக்கு, பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் தரும் பணியை தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT


இந்நிலையில் டெங்கு பரவாமல் தடுத்தல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறும் பணிகளில் ரஜினி மக்கள் மன்றமும் இறங்கியுள்ளது. வேலூர் மாநகரம் இரண்டாவது மண்டல ரஜினி மக்கள் மன்றம் சார்பாக டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி அக்டோபர் 20ந்தேதி நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்ட செயலாளர் சோளிங்கர் என்.இரவி, மாவட்ட இணை செயலாளர் ஆர்.நீதி (எ) அருணாச்சலம் கலந்து கொண்டனர். பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சிறிது தூரம் ஊர்வலமும் சென்றனர். அப்போது பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், டெங்குவை ஒழிப்போம், விவசாயத்தை காப்போம் என முழக்கமிட்டபடி சென்றனர்.

ADVERTISEMENT


இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட செயலாளர் சோளிங்கர் என்.இரவி, நமது முன்னோர்கள் சொல்வார்கள் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று. என்னதான் நம்மிடம் கோடி கணக்கில் பணம் இருந்தாலும் நோய் என்று ஒன்று வந்துவிட்டால் மன நிம்மதி போய்விடும். நோய் வந்த பின் அதற்காக வருந்துவதை விட நோய் வரும் முன் அதிலிருந்து நம்மை காத்துக்கொள்ள வேண்டும். இது ஏன் இங்கே சொல்கிறேன் என்றால் ஒரு மனிதனின் உடலில் சராசரியாக 3 லட்சம் தட்டணுக்கள் இருக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் வந்தால் தட்டணுக்களின் எண்ணிக்கை தான் குறையும். தினம் தினம் தட்டணுக்கள் குறைந்து வந்து 20 ஆயிரத்துக்கும் குறைவானதாகும்போது உயிரிழப்பு ஏற்படும். அதனால் இதனை நாம் கவனத்தில் கொண்டு டெங்கு காய்ச்சல் வராமல் இருக்க முதலில் நாம் நம் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கொசுக்கள் உற்பத்தி ஆகாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் யாருக்காவது காய்ச்சல் வந்தால் மருத்துவரை கலந்தாலோசிக்காமல், நாமாகவே இந்த காய்ச்சல் தான் முடிவு செய்து மாத்திரை, மருந்துகளை எடுத்து கொள்வது தவறு.

அருகில் உள்ள மருத்துவமனை அல்லது கிளினிக்கு சென்று மருத்துவரை பார்த்து சிசிக்சை பெறவேண்டும், தொடர் காய்ச்சல் இருந்தால் அவர் இரத்த பரிசோதனை செய்யச்சொல்வார் அதனை செய்ய வேண்டும். சரியான நேரத்தில் தேவையான சிகிச்சை பெற்றால், நம்மையும் காப்பாற்றிக்கொள்ளலாம், பிறருக்கு பரவாமல் தடுக்கலாம். டெங்கு எவ்வாறு பரவுகிறது என்றால் டெங்குவால் பாதிக்கப்பட்டவரை கடித்த கொசு மற்றவரை கடித்தால் அவருக்கும் டெங்கு பரவும். எனவே இந்த தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்க்கும் வகையில் வேலூர் மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், வரும் முன் காப்போம் நடவடிக்கையாக பொதுமக்கள் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கவேண்டும் என்று தெரிவித்தார். தலைமை உத்தரவிடும் முன்பே விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி கூறினார்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT