ADVERTISEMENT

நிவர் புயலில் இருந்து தப்பிய டெல்டா!!

05:15 PM Nov 26, 2020 | kalaimohan

ADVERTISEMENT

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் 'கஜா' புயலுக்குப் பலி கொடுத்து, மீளாத் துயரில் இருந்த டெல்டா மாவட்ட மக்கள், 'நிவர்' புயல் திசை மாறியதால் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.

கடந்த 2018 -ஆம் ஆண்டு, நவம்பர் 15 -ஆம் தேதி, நள்ளிரவில் வேதாரண்யம் கடற்பகுதியில் தனது கோரத் தாண்டவத்தை துவங்கிய, 'கஜா' புயல், 16 -ஆம் தேதிவரை ஒட்டுமொத்த டெல்டா நிலத்தையும் தரைமட்டமாக்கியது.

நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான மா, பலா, முந்திரி, தென்னை உள்ளிட்ட மொத்த மரங்களையும் முறித்து வீசிவிட்டுச் சென்றது. கால்நடைகள் முழுவதும் இறந்து தண்ணீரில் மிதந்தன. குடிசைவீடுகளும், மச்சு வீடுகளும் காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தரைமட்டமாக நொருங்கிக் கிடந்தன.

ஊருக்கே உழவு செய்து சோறுபோட்ட டெல்டா மாவட்ட மக்கள் சோற்றுக்கும், குடிதண்ணீருக்கும் கையேந்தி வீதிகளில் நின்றனர். அறுபது ஆண்டுகால உழைப்பை ஒரே இரவில் துவசம்செய்த 'கஜா'வின் கோரத் தாண்டவத்தை நினைத்து, இன்றளவும் அந்த மக்கள் அஞ்சுகின்றனர்.

இந்தநிலையில், வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான 'நிவர்' புயல், அதிதீவிரமடைந்து காரைக்கால்-மகாபலிபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால், தனியார் வானிலை நிபுணர்கள் 'கஜா' புயல் தாக்கிய திசையிலேயே பயணிக்கும் எனத் தயக்கத்தோடு அறிவித்துவந்தனர். அதனால், உட்சபட்ச அச்சத்திற்குச் சென்ற டெல்டா மாவட்ட மக்கள், பாதுகாப்புத் தேடி முகாம்களில் தஞ்சமடைந்திருந்தனர். விவசாயிகள் தென்னை மரங்களின் மட்டைகளை வெட்டினர். கால்நடைகளைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்றிருந்தனர்.

ஆனால், நேற்று புயல் திசைமாறி வடமேற்குத் திசைக்குச் சென்றதால், டெல்டா தப்பியது. நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரண்டு நாட்களாக நள்ளிரவு முதல் பலத்த காற்றுடன் மழை கொட்டித் தீர்த்தது. டெல்டா மாவட்ட மக்கள் கூறுகையில், "இனி எந்தப் புயல் வந்தாலும் எங்களிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை. 'கஜா' புயலில் பறிகொடுத்த வீடுகளை இன்னும் நாங்கள் கட்ட முடியவில்லை. முறிந்த தென்னை மரங்களைக் கூட அப்புறப்படுத்த முடியவில்லை. இந்தச் சூழலில் இன்னொரு புயல் வந்தால், இழப்பதற்கு உயிரைத் தவிர வேறு எதுவும் இல்லை என மனதிற்குள் நினைத்து துணிந்துவிட்டோம். ஆனாலும் அந்த இயற்கையை வணங்கினோம். எங்களை இந்தப் புயல் ஒதுக்கிவிட்டது. கடல் தாய் இந்தமுறை எங்களுக்குக் கருணை காட்டிடுச்சி" என்கிறார்கள் ஆனந்தக் கண்ணீரோடு.

ஆனாலும் 'கஜா' புயல் கற்றுக்கொடுத்த பாடம், முன்கூட்டியே வீடுகளில் ஓடுகளைக் கழற்றுவது, தென்னை மட்டைகளை வெட்டுவது, தாழ்வான பகுதிகளை மண்மூட்டைகளைக் கொண்டு நிரப்புவது, முன்கூட்டியே முகாம்களில் மக்களைக் கொண்டுவந்து வைப்பது என எச்சரிக்கையாகவே இருந்தனர்.

" 'நிவர்' புயல் 'கஜா' புயலுக்கு நிகராக இருக்கும் எனத் தமிழக முழுவதும் அச்சத்தில் உறைந்திருந்த நிலையில், வலுவிழந்து கரைகடந்ததால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகள் பெரும் மழையோடு தப்பித்திருக்கிறது," என்கிறார்கள் பலரும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT