ADVERTISEMENT

கடன் பிரச்சனையால் தந்தை தற்கொலை... தந்தையுடன் மகளும் இறந்த சோகம்!

05:36 PM Nov 23, 2020 | tarivazhagan

ADVERTISEMENT


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்கா நாகாம்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் (38). இவருக்கு மங்கையர்க்கரசி என்ற மனைவியும் ஆர்த்தீஸ்வரி என்ற 7 வயது மகளும் உள்ளனர். இந்த நிலையில், விவசாயியான ஐயப்பன், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, அதே ஊரில் டீக்கடை நடத்திவரும் ராஜசேகர் என்பவர் மூலம், திண்டிவனம் அருகில் உள்ள எடையன்குளம் என்ற ஊரைச் சேர்ந்த சம்பத் என்பவரிடம், வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டு 25,000 ரூபாய்க் கடன் பெற்றுள்ளார்.

ADVERTISEMENT

அதன்பிறகு, வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் சிரமப்பட்டுள்ளார் ஐயப்பன். இதனால், கடன் தொகை 25,000-ஐ வட்டியுடன் சேர்த்து 50 ஆயிரமாக திருப்பித் தர வேண்டும், இல்லாவிட்டால் 2 லட்ச ரூபாய்க்கு உனது பத்திரத்தில் சொத்துகளை எழுதி கையெழுத்திட்டுத் தர வேண்டும். அதுவும் இல்லை என்றால், உனது சொத்துகளை ஜப்தி செய்துகொள்வோம் என்று கூறி ஐயப்பனை சம்பத் உள்ளிட்ட இருவரும் சேர்ந்து மிரட்டியுள்ளனர்.

இதனால், விரக்தியடைந்த ஐயப்பன், கடந்த 7ஆம் தேதி மாலை, 5 மணியளவில், தனது வீட்டில் குளிர்பானம் வாங்கி வந்து, அதில் விஷம் கலந்து குடித்துள்ளார். இதனால் மயக்கமுற்ற ஐயப்பன், வாந்தி எடுத்துள்ளார். அதேநேரம் அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஐயப்பனின் மகள் ஆர்த்தீஸ்வரி, விஷம் கலந்து இருப்பது தெரியாமல் அந்தக் குளிர்பானத்தை எடுத்துக் குடித்துள்ளார்.


இதனால் தந்தை, மகள் இருவரும் மயங்கி விழுந்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு ஐயப்பன், ஆர்த்தீஸ்வரி இருவரும் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர்.


இருவரின் இறப்பிற்குக் காரணமானவர்கள் மீது, கந்து வட்டிக் கொடுமைப் பிரிவில் வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும் என்று கூறி, நேற்று காலை, ஐயப்பன் மனைவி மங்கையர்க்கரசி மற்றும் அவரது உறவினர்கள், இறந்துபோன இருவரது உடல்களையும் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த டி.எஸ்.பி ராஜேந்திரன், சப் இன்ஸ்பெக்டர் பரமசிவம் ஆகியோர் அங்குவந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த கந்துவட்டிக் கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் மற்றொருவரை விரைவில் கைது செய்வதற்குத் தீவிரமாகத் தேடி வருவதாகவும் அதிகாரிகள் சமாதானம் கூறினர். அதை ஏற்று இறந்துபோன இருவரது உடலையும் பெற்றுக்கொண்ட குடும்பத்தினர், நேற்று மாலை 7 மணிக்கு அடக்கம் செய்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT