ADVERTISEMENT

'இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

06:10 PM Apr 14, 2024 | kalaimohan

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

ADVERTISEMENT

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''பிரம்மாண்டமான கட்டிடத்தை கட்டி கொடுத்திருக்கிறோம். கட்டி 3 வருடம் ஆகிறது. 1200 கோடியில் கட்டிக் கொடுத்திருக்கிறோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா என பல கட்டிடங்களை கட்டி வைத்திருக்கிறோம். ஆனால் ஒற்றைச் செங்கலை தூக்கிக்கொண்டு ஊர் ஊராக போகிறீர்களே உதயநிதி ஸ்டாலின் பல லட்சம் செங்கலில் கட்டி இருக்கிறோம் ஏன் அதை திறக்க மாட்டேன் என்கிறீர்கள்.

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடம் என்று இன்றுவரை ரிப்பன் வெட்டுவதற்கு உங்களால் முடியவில்லை. மூன்று வருடம் ஆகிறது. இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது. என்ன கொடுமை பாருங்கள் நிறைவேற திட்டத்தை செங்கல்லை தூக்கிக்கொண்டு விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் கட்டிமுடித்த திட்டத்தை திறக்க முடியாத ஒரே அரசு திமுக அரசு. இந்த திட்டம் கொண்டுவரக் கூடாது என்று பார்க்கிறார்கள்.

இது ஆசியாவிலேயே மிகப்பெரிய திட்டம். கால்நடை பூங்கா திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம். அமெரிக்கா செல்லும் பொழுது அங்கு ஒரு பால் பண்ணைக்கு சென்றேன். அங்கு ஒரு பசு ஒரு நாளைக்கு 65 லிட்டர் பால் கறக்கிறது. அந்த பசு போல நம்முடைய மாநில சீதோசன நிலைக்குத் தக்கவாறு கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகள் கொடுக்க வேண்டும். 40 லிட்டர் பாலை ஒரு நாளைக்கு கறந்து அவர்கள் வருமான பெருக வேண்டும் என்பதற்காக இந்த அற்புதமான திட்டத்தை கொண்டு வந்தேன். அதில் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் உள்ளது . அதன் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு கிடைக்கும் கால்நடைகளை விவசாயிகளுக்கு கொடுத்து இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் குறிக்கோள். இன்று நாம் ஒரு ஆடு வளர்த்தால் 20 கிலோ தான் கிடைக்கும். ஆனால் கலப்பின ஆடு வளர்த்தால் 40 கிலோ கிடைக்கும். இந்த திட்டத்தை முடக்கி வைத்த அரசாங்கம் திமுக அரசாங்கம். கால்நடை பூங்கா வந்திருந்தால் இந்தப் பகுதி பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும். உலக அளவில் நம்முடைய சேலம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி பிரசித்தி பெற்றிருக்கும்'' என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT