ADVERTISEMENT

பெரியவர்கள் கூறியதை மீறி ஏரியில் குளித்த இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு! சோகத்தில் மூழ்கிய கிராமம்

09:34 AM Oct 22, 2020 | tarivazhagan

ADVERTISEMENT


கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள காஞ்சிராங்குளம் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் மகள் மனிஷா(12). அதே கிராமத்தின் தெற்குத் தெருவைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகள் மேகலா(12). இவர்கள் இருவரும் அருகில் உள்ள கிராமத்தில், அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தனர். தோழிகளான இவர்களிருவரும் நேற்று மாலை 4 மணியளவில் வீட்டிலிருந்து வெளியில் விளையாடச் சென்றனர். ஆனால் நீண்ட நேரமாகியும் இருவரும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவர்களது பெற்றோர்கள் சிறுமிகள் இருவரையும் பல இடங்களில் தேடினர்.

ADVERTISEMENT

இந்நிலையில் வீட்டிலிருந்து விளையாடச் சென்ற சிறுமிகள் இருவரும் அப்பகுதியில் உள்ள காஞ்சராங்குளம் ஏரிக்கு குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது அப்பகுதி மக்கள் 'கடந்த சில தினங்களாக மழை பெய்ததால் ஏரியில் தண்ணீர் அதிகமாக உள்ளது, குளிக்கக்கூடாது' எனக் கூறியுள்ளனர். ஆனால் அதனையும் மீறி அவர்கள் ஏரிக்கு குளிக்கச் சென்றுள்ளனர். ஏரியில் அதிக அளவில் மணல் எடுத்து, ஆழப்படுத்தி இருந்ததால், ஆழம் தெரியாமல் சிறுமிகள் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் கூச்சலிட்டுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் உடனடியாக ஓடோடி வந்து ஏரிக்குள் குதித்து சிறுமிகளைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் சிறுமிகள் இருவரும் இறந்துவிட்டனர். பின்னர் மணிஷா, மேகலா ஆகியோரது உடல்களை மீட்டனர்.

இத்தகவல் பிள்ளைகளை தேடி வந்த பெற்றோருக்குத் தெரிய வந்து உடனடியாக அவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். குழந்தைகள் இருவரும் இறந்து கிடந்ததைக் கண்டு பெற்றோர்கள், உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுபாக்கம் போலீசார் ஏரியில் மூழ்கி இறந்த இரண்டு சிறுமிகளின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். "2 சிறுமிகள் உயிரிழந்த இந்த ஏரியில் முறையான குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளவில்லை என்றும், அளவுக்கதிமாக பள்ளம் தோண்டி மணல் எடுக்கப்படுவதால், ஏரிக்குள் இறங்குபவர்கள் எந்தப் பகுதி ஆழம் மிகுந்த பகுதி, எந்தப் பகுதி ஆழம் குறைவான பகுதி என்று தெரியாமல் ஏரியில் இறங்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது". என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். மேலும், "இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அதிகாரிகளின் அலட்சியமே சிறுமிகளின் உயிரிழப்புக்கு காரணம்" எனக் குற்றம் சாட்டுகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT