ADVERTISEMENT

கொலைசெய்து கோவில் வளாகத்தில் புதைத்த வழக்கில் தேடப்பட்டவர் பிணமாகக் கண்டெடுப்பு...!

04:59 PM Sep 08, 2020 | tarivazhagan

ADVERTISEMENT



கடலூர் மாவட்டம் பண்ருட்டி, வி.ஆண்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணதாசன். ஹோட்டல் தொழிலாளியான இவர் பண்ருட்டி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்த மோகன் மனைவி மஞ்சுளா என்பவருடன் கடந்த ஐந்து ஆண்டுகளாக தனியாக குடும்பம் நடத்தி வந்தார். இந்த நிலையில் மஞ்சுளா கடந்த நான்காண்டுகளாக பண்ருட்டி லிங்கா ரெட்டிபாளையம் வேணுகோபால சுவாமி கோவில் அர்ச்சகர் கோபிநாத்திடம் பணியாளராக வேலை செய்துவந்தார்.

ADVERTISEMENT

கோபிநாத், பிரபல ஜோதிடர். இவரிடம் ஜோதிடம் பார்க்க வருபவர்களுக்கு டோக்கன் வழங்குவது, பிறகு அவரது வீட்டு வேலைகளையும் செய்துவந்தார். இந்த தொடர்பால் அர்ச்சகர் கோபிநாத்துக்கும் மஞ்சுளாவுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டது. இது தெரிந்த கண்ணதாசன் அடிக்கடி சென்று கோபிநாத்திடம் தகராறு செய்து வந்துள்ளார். இதன் காரணமாக கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி இரவு கண்ணதாசனை சமாதானம் பேசுவதாகக் கூறி கோவிலுக்கு வரவழைத்த அர்ச்சகர் கோபிநாத், மஞ்சுளா, கொத்தனார் திருப்பதி என்கிற சீனிவாசன் ஆகியோர் கண்ணதாசனை கொலைசெய்து கோவில் வளாக அறையில் பள்ளம் தோண்டி புதைத்துவிட்டனர். இந்தக் கொலை வழக்கில் கோவில் அர்ச்சகர் கோபிநாத், மஞ்சுளா இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கண்ணதாசன் கொலைக்கு உதவி செய்த கொத்தனார் திருப்பதி என்ற சீனிவாசன்மீதும் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சீனிவாசனை தேடிவந்தனர். இந்தநிலையில் சீனிவாசன் குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

கடந்த 26ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் போலீஸ் நிலைய எல்லைப் பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் 55 வயதுள்ள ஒரு ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இறந்து சில நாட்களான அந்த உடலை நரிகள் ஓநாய்கள் கடித்துச் சிதைத்த நிலையில் கிடந்துள்ளது. இறந்து கிடந்த அந்த உடல் யாருடையது என்ற விவரம் தெரியாததால் கடந்த 26ஆம் தேதி ஆரோவில் போலீசார் அந்த உடலை அடக்கம் செய்துவிட்டனர். அந்த உடலை புகைப்படம் எடுத்து காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்து விவரம் கேட்டுள்ளனர்.

அதைப் பார்த்துவிட்டு திருப்பதி என்கிற சீனிவாசனின் மனைவி ரேவதி அவரது மகன் முரளி ஆகியோர் ஆரோவில் காவல் நிலையம் சென்று இறந்தவர் பற்றிய விவரம் கேட்டுள்ளனர். அவர்களிடம், போலீசார் பிணம் கிடந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட இறந்தவரின் சட்டை, லுங்கி, செருப்பு ஆகியவற்றை காட்டியுள்ளனர். அதைப்பார்த்த சீனிவாசன் மனைவி ரேவதி, அவரது மகன் முரளி அவை சீனிவாசன் உடையதுதான் என்று ஒப்புக்கொண்டனர். இதையடுத்து கண்ணதாசன் கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த திருப்பதி என்கிற சீனிவாசன் கொலை வழக்கில் சிக்கி சிறையில் செல்ல வேண்டும் என்ற பயத்தில் தலைமறைவாக இருந்தவர், தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT