ADVERTISEMENT

தஞ்சை மாணவி உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டு அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவு

12:48 PM Jan 22, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தஞ்சையில் தற்கொலை செய்துகொண்டு இறந்த மாணவியின் உடலை அவரின் பெற்றோர் பெற்றுக்கொண்டு அடக்கம் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை அருகே தனியார் கிறிஸ்தவப் பள்ளி விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்துவந்த மாணவி, கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக உயிரிழந்த மாணவியின் தந்தை முருகானந்தம், நீதிபதி சுவாமிநாதன் முன்பாக இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து நீதிபதி சுவாமிநாதன், அதனை அவசர வழக்காக எடுத்து விசாரித்தார். அப்போது மனுதாரர் தரப்பில், “மாணவி நன்றாகப் படிக்கக்கூடியவர், அவரை விடுதி கணக்குகளைப் பார்க்கச் சொல்லி தொடர்ச்சியாக வற்புறுத்தியதால் தற்கொலை செய்துகொண்டதாக வாக்குமூலத்தில் கூறியுள்ளார். ஆனால், பள்ளி நிர்வாகம் தரப்பில் சிலர் மாணவியை மதம் மாறக்கூறி கட்டாயப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக மாணவி பேசியதாக வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவியது. அதனைப் பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குறிப்பிட்டிருக்கிறார்” எனத் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர், “இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த விவகாரம் தொடர்புடைய வார்டன் சகாய மேரி, ஜனவரி 18ஆம் தேதியே விசாரணை வலையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து நீதிபதி, “மாணவியின் தந்தை சிறுமியை மதம் மாறச்சொன்னது தொடர்பாக காவல்துறையிடம் ஏதேனும் தெரிவித்திருக்கிறாரா” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு மனுதாரர் தரப்பில் “அதுகுறித்து எதுவும் விசாரிக்கப்படவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நீதிபதி, “மாணவிக்கு ஏதேனும் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டுள்ளதா” என்று கேள்வி எழுப்பினார். அதற்கும் மனுதாரர் தரப்பில் இல்லை என்று பதில் அளிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “மாணவியின் உடலை மறுகூறாய்வு செய்யத் தேவையில்லை. திருகாட்டுபட்டி காவல் ஆய்வாளர் ஜனவரி 16ஆம் தேதி மாணவியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து அதன் அடிப்படையில், வழக்குப்பதிவும் செய்துள்ளார். சிகிச்சை பலனின்றி சிறுமி 19ஆம் தேதி உயிரிழந்துள்ளார். அவரது இறப்புக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வீடியோவென சமூகவலைதளங்களில் ஒரு வீடியோ பரவியுள்ளது. அதில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுமாறு கட்டாயப்படுத்தியதாகச் சிறுமி கூறியுள்ளார் எனத் தெரியவருகிறது. இது, முரண்பாட்டை ஏற்படுத்துவது போல் தெரிகிறது. அதேபோல், அந்த வீடியோவை எடுத்த நபரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்போவதாகத் தஞ்சை காவல் கண்காணிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியின் உடல் ஏற்கனவே தஞ்சை மருத்துவக் கல்லூரியில் உடற்கூராய்வு செய்யப்பட்டுவிட்டது.

மாணவிக்குப் பாலியல் தொல்லை எதுவும் வழங்கப்படவில்லை. அது தொடர்பான சந்தேகம் எதுவும் அவரின் பெற்றோரும் முன்வைக்கவில்லை. ஆகவே மறு உடற்கூராய்வு செய்யத் தேவையில்லை. மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டு அடக்கம் செய்ய வேண்டும். நாளை மாணவியின் பெற்றோர் தஞ்சை நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜராகி, தனது மகள் தங்களிடம் தெரிவித்தது குறித்தும், மாணவியின் இறப்பு குறித்தும் வாக்குமூலம் அளிக்க வேண்டும். அதனைப் பதிவு செய்து தஞ்சை நீதித்துறை நடுவர், சீலிட்ட கவரில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், வழக்கை வரும் திங்கள் கிழமை மாலை 4 மணிக்கு பட்டியலிட உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT