Skip to main content

மதுரை விமானநிலைய சம்பவம்; இ.பி.எஸ். மீது வழக்குப் பதிவு! 

Published on 12/03/2023 | Edited on 12/03/2023

 

Madurai Airport incident; a case File against  EPS

 

மதுரை வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமான நிலையத்தில் வைத்து வீடியோ எடுத்த அமமுக நிர்வாகி ராஜேஸ்வரனை அதிமுகவினர் சரமாரியாகத் தாக்கியதால் பரபரப்பு உண்டானது.

 

ஜெயலலிதாவின் மறைவையடுத்து ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வந்த நிலையில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்சனை பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து,அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும் பிரிந்தது. அதன் பிறகு பொதுக்குழு கூட்டப்பட்டு அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

இந்நிலையில் சிவகங்கையில் நடைபெறும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கூட்டம் மற்றும் கட்சியின் பொதுக்குழு கூட்டமும் நேற்று மாலை நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் மதுரை வந்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது சிங்கப்பூரில் வேலை பார்த்து விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த அமமுக கட்சித் தொண்டர் ராஜேஸ்வரன், பழனிசாமி சென்ற அதே விமானத்தில் பயணம் செய்தார். பழனிசாமியை பார்த்து கோபமடைந்த அமமுக கட்சியின் தொண்டர் ராஜேஸ்வரன், எடப்பாடிக்கு எதிராக முழக்கமிட்டு வீடியோ பதிவு செய்தார். இதனைக் கண்ட பழனிசாமியின் பாதுகாவலர் ராஜேஸ்வரனிடம் இருந்து அவரது செல்போனை பறித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

 

Madurai Airport incident; a case File against  EPS

 

அந்த வீடியோவில் அவர் பேசும்போது, “எல்லோரும் பார்த்துக் கொள்ளுங்கள். நம்முடன் போய்க்கொண்டு இருப்பது எதிர்க்கட்சித் தலைவர், துரோகத்தின் அடையாளம் எடப்பாடியாருடன் நான் பயணித்துக் கொண்டு உள்ளேன். அண்ணன் எடப்பாடியார் துரோகத்தின் அடையாளம்; சசிகலாவிற்கு துரோகத்தை பண்ணியவர். 10.5% இடஒதுக்கீட்டை தென்நாட்டு மக்களுக்கு எதிராக கொடுத்தவர்” என்றார். அமமுக தொண்டர் பழனிசாமிக்கு எதிராக வீடியோ எடுத்து பேசிய தகவல் அதிமுகவினருக்கு தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்த ராஜேஸ்வரனை அதிமுகவினர் சரமாரியாகத் தாக்கினர். இந்நிலையில் பழனிசாமிக்கு எதிராக பேசியவர் குறித்து விசாரித்த போது அவர் அமமுகவின் வெளிநாடு வாழ் மக்கள் தொடர்பு பிரிவின் சிவகங்கை மாவட்டச் செயலாளராக உள்ளார் என்பது தெரிய வந்தது.

 

அதனைத் தொடர்ந்து ராஜேஸ்வரன் மீது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் போலீஸில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், போலீஸார் ராஜேஸ்வரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

 

இந்நிலையில், ராஜேஸ்வரன் அளித்த புகாரின் அடிப்படையில், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஆறு பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“அதிகார பலமிக்கவர்களின் ஆதரவோடு சாராய விற்பனை நடக்கிறது” - இ.பி.எஸ்

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
EPS alleges Liquor sale is going on with the support of powerful people

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் பகுதியில் நேற்று (19-06-24) கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், இதனைப் பலர் வாங்கி குடித்து பலியானோரின் எண்ணிக்கை தற்போது 37 ஆக உயர்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர்  ஜிப்மர் மருத்துவமனை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் எனப் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்தச் சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “விஷச் சாராய மரணம் வேதனை அளிக்கிறது. இவ்வளவு அதிகமான நபர்கள் உயிரிழந்த செய்தி வேதனையை ஏற்படுத்துகிறது. கள்ளச்சாராயம் குடித்து மேலும் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வருகிறது. 35க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்கள் அனைவருமே மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளவர்கள். கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்ற இடத்திற்கு அருகில் தான் காவல் நிலையம் இருக்கிறது. காவல் நிலையம் அருகிலேயே சாராயம் விற்பனை என்றால் ஆட்சி அதிகாரம் எப்படி இருக்கிறது எனத் தெரிந்துகொள்ளலாம். 

ஆளுங்கட்சி மற்றும் அதிகார பலமிக்கவர்களின் ஆதரவுடன்தான் இந்தக் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுகிறது. மிகப்பெரிய கும்பல் இதற்குப் பின்னால் இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. முதலில் வீர வசனம் பேசுகிறார்கள். சம்பவம் முடிந்த பிறகு அப்படியே விட்டுவிடுகிறார்கள். ஏற்கெனவே நடந்த சம்பவத்தையும் சிபிசிஐடி விசாரித்தது. அந்த வழக்கு என்னவானது?. கடந்த ஆண்டு நடந்த கள்ளச்சாராய மரண வழக்கில் யாரெல்லாம் கைது செய்யப்பட்டனர் என்பது கூட தெரியவில்லை. கள்ளக்குறிச்சி மட்டுமல்ல தமிழகம் முழுவதும் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. 

சென்னையில் இருந்து மருத்துவர்களை அழைத்து வந்து சிகிச்சை அளித்திருந்தால் பலரைக் காப்பாற்றி இருக்க முடியும். ஆனால், இந்த மரணத்தை வயிற்றுப்போக்கு, வயிற்று வலி என முன்னாள் ஆட்சியல் பச்சைப் பொய் கூறினார். இந்த மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். முதல்வர் ஸ்டாலினுக்கு ஆட்சி, அதிகாரம் மட்டுமே முக்கியமாக இருக்கிறது. மக்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை” எனக் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். 

Next Story

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
chennai airport unknown person email related issue

சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என விமான நிலைய இயக்குநர் அலுவலகத்திற்கு  நள்ளிரவில் இ - மெயில் ஒன்று வந்துள்ளது. இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்கள் குழு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனைக்குப் பின்னர் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளிதான் எனத் தெரியவந்தது. சென்னை விமான நிலையத்திற்குக் கடந்த 2 வாரத்தில் 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் இதுவாகும். இந்த வெடிகுண்டு புரளியைக் கிளப்பும் மர்ம நபர்கள் குறித்து விமான நிலைய அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு நேற்று (16.06.2024) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்குத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ரயில் நிலையத்தின் பயணிகள் தங்கும் அறைகள், தண்டவாளங்கள், ரயில்வே நடைமேடைகள், பயணிகள் பொருட்கள் வைக்கும் இடங்களில் தீவிர சோதனை நடைபெற்றது.

இந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக திருநெல்வேலியின் பல்வேறு பொது இடங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அதே சமயம் இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான விசாரணையில் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சிவபெருமாள் (வயது 42) என்பவரை நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.