ADVERTISEMENT

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவு!

08:18 PM Apr 23, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவம் தாக்கல் செய்த மனுவுக்குப் பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1991-96ம் ஆண்டுகளில் சின்னசேலம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த பரமசிவம் மீது வழக்கு தொடரப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு துறை தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம், எம்.பி. எம்.எல்.ஏ..க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவத்துக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 33 லட்சத்து 4 ஆயிரத்து 168 ரூபாய் அபராதமும் விதித்து கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மனுவில், கரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வரும் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், 22 லட்சத்து 58 ஆயிரத்து 746 ரூபாய் சொத்து குவித்துள்ளதாகக் கூறிய நிலையில், 33 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்ததாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி முடிவுக்கு வந்தது குற்றப்பத்திரிகைக்கு முரணானது எனவும், இந்த தொகை எப்படி கண்டறியப்பட்டது எனவும் விசாரணை நீதிமன்றம் தெரிவிக்கவில்லை எனவும், சொத்துகள் மதிப்பீடு செய்ததில் தவறுகள் உள்ளதாகவும் முன்னாள் எம்.எல்.ஏ. தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, மனுவுக்கு 29ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையைத் தள்ளிவைத்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT