Skip to main content

பொதுக்குழு நோட்டீஸில் கையெழுத்திடுவது யார்?-எடப்பாடி பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைப்பு!  

Published on 07/07/2022 | Edited on 07/07/2022

 

Ordered to file Edappadi's reply and adjourned the case!

 

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடைக்கேட்ட ஓ.பன்னீர்செல்வம் வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

 

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, வரும் ஜூலை 11- ஆம் தேதி அன்று அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெறலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதே. பொதுக்குழு நடத்தலாம் என உச்சநீதிமன்றமே கூறிய பின் ஐகோர்ட் என்ன உத்தரவிட முடியும்? உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் மனுதாரர் அங்கு தான் செல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.

 

எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பொதுக்குழுத் தடை தவிர பிற கோரிக்கைகளுக்கு மட்டுமே ஐகோர்ட்டை நாட உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. பொதுக்குழு நடத்தும் உரிமை எந்த விதத்திலும் தடுக்கப்படக் கூடாது. இரு நீதிபதிகள் அமர்வில் நிலுவையிலிருந்த கூடுதல் மனுக்கள் இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. தடைக்கோரிய மனு ஏற்கனவே தள்ளுபடியான நிலையில், மீண்டும் அதே கோரிக்கையை எழுப்ப முடியாது. காவல்துறை பாதுகாப்பு, விரும்பத்தகாத சம்பவங்களைத் தடுப்பது போன்ற கோரிக்கைகள் வைத்தால் ஆராயலாம். கட்சி உள்விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது" எனத் தெரிவித்தார்.

 

இதற்கு நீதிபதி, கட்சியின் அனைத்து கூட்டங்களுக்கும் முறையாக அழைப்பிதழ் அனுப்பி நடத்தப்படுகிறதா? கடந்த ஜூன் 23- ஆம் தேதி அன்று பொதுக்குழுவின் தொடர்ச்சியாகவே, ஜூலை 11- ஆம் தேதி நடத்தப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், தலைமைக் கழக நிர்வாகிகள் என்ற அமைப்பே தற்போது அ.தி.மு.க.வில் இல்லை. நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தீர்மானங்களும் பொதுக்குழு தீர்மானங்களும் முரணாக இருந்தன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ மட்டுமே பொதுக்குழுவைக் கூட்ட முடியும் என்று வாதிட்டனர்.

 

eps

 

அதனைத்தொடர்ந்து எடப்பாடி தரப்பு, 'தற்போதைய நிலையில் கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளே இல்லை. கட்சி விதிகளை திருத்தும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு மட்டுமே உள்ளது. எனவே தற்காலிக பொதுச்செயலாளரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளோம். ஜூலை 11 ஆம் தேதி நடைபெற இருப்பது சிறப்பு பொதுக்குழு. இந்த வழக்கை ஒருவாரத்திற்கு கூட தள்ளி வையுங்கள் ஆனால் பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க கூடாது' என்ற வாதங்களை முன்வைத்தது.

 

அதனைத் தொடர்ந்து பொதுக்குழு நோட்டீஸில் கையெழுத்திடுவது யார்? என கேள்வியெழுப்பிய நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, எத்தனை நாட்களுக்கு முன் பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்? கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி காலியாகிவிட்டதா? அதிமுக பொதுக்குழுவைக் கூட்டத் தலைமை கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இபிஎஸ் தரப்பு  விரிவான பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்