O. Panneer Selvam... rejection...

Advertisment

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த 20.04.2023 அன்று அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அதிமுகவின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வருகிறார். இதனால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அதிமுகவின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடைவிதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், 'எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்' என ஓபிஎஸ் தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர் செல்வம் தரப்பில், “பொதுக்குழு தொடர்பான பிரதான சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஜனவரி 19 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. எனவே எந்த தடையும் விதிக்கக் கூடாது” என வாதிடப்பட்டது.

அந்த வழக்கில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. அதிமுக கொடி, பெயர், சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் எனவும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. மேலும் சம்பந்தப்பட்ட நீதிபதியை அணுகி நிவாரணம் பெற ஓ.பன்னீர்செல்வத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Advertisment

அதிமுகவின் போதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் இன்று விசாரணை நடைபெற்றது. இன்று நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆஜராகி வாதங்களை முன் வைத்தார். அதில் அதிமுக பொதுகுழுவிற்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் வைத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதித்தால் அதிமுகவின் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், அதிமுகவில் பிளவு இருப்பதாக தெரிகிறது. அதற்கு கட்சியே தீர்வு காண வேண்டும் என தெரிவித்து இடைக்கால உத்தரவு கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனால் பொதுக்குழு தொடர்பான மூல வழக்கை தொடர்ந்து நடத்தலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தகூடாது என்ற உத்தரவால் அதிமுக தொண்டர்கள் மீட்பு இயக்கம் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆதரவாளர்களை சந்தித்து வந்தார். தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தப்பட்டு அதிமுக மீட்கப்படும் எனவும், எங்களுக்கு அதிமுகத்தான் உயிர் மூச்சு போன்றது. புதுக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என்றும் ஓபிஎஸ் தெரிவித்து வந்தார். இந்நிலையில் நீதிமன்றங்களின் தொடர் நிராகரிப்புகள் ஓபிஎஸ் அரசியல் வட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளது.