ADVERTISEMENT

கேரளாவில் இருந்து வருவோருக்கு கரோனா பரிசோதனை கட்டாயம்!

07:40 PM Sep 08, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாகத் தற்சமயம் கரோனா தாக்கம் குறைந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தினசரி பாதிப்பு குறைந்துள்ளது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவல் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஓணம் பண்டிகைக்குப் பிறகு அங்குத் தினசரி பாதிப்பு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் எனப் பதிவாகி வருகிறது. இதையடுத்து தமிழக அரசின் மாநில சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழகத்தில் உள்ள கேரள எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு கரோனா பரிசோதனை தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஈரோடு வழியாகக் கேரளாவுக்குத் தினமும் 60 க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கேரளாவிலிருந்து ஈரோட்டுக்கு வருகின்றனர். அவர்களுக்குச் சுகாதாரத் துறையினர் சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு உடல் வெப்பநிலையை அறிந்து கொள்ளும் வகையில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுக்களுக்கு கரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது. கேரளாவில் மீண்டும் தொற்று அதிகரித்துள்ளதால் நோய்த் தடுப்பு நடவடிக்கையாக அங்கிருந்து ரயில் மூலம் ஈரோட்டுக்கு வரும் பயணிகளுக்கு ஈரோடு ரயில் நிலையத்திலேயே கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

கேரளாவிலிருந்து ரயிலில் வரும் பயணிகள் விவரங்களை சுகாதாரத்துறையினர் முதலில் சேகரிக்கின்றனர். அவர்கள் பெயர், செல்போன் நம்பர், எங்குச் செல்கிறீர்கள், எங்கு வேலை பார்க்கிறீர்கள் போன்ற விவரங்களைச் சேகரிக்கின்றனர். பின்னர் அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் காய்ச்சல் அறிகுறி இருந்தால் அவர்களுக்கு அங்கேயே கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதன் பின்னர் அவர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவர்கள் எந்த பகுதியில் உள்ளார்களோ அந்தப் பகுதி சுகாதாரத்துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கின்றனர். பரிசோதனை முடிவில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கேரளாவில் மீண்டும் தினசரி கரோனா பாதிப்பு 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அம்மாநிலத்தில் 30,196 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட 181 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நேற்று 15.87 ஆக இருந்த கரோனா உறுதியாகவும் சதவீதம், தற்போது 17.63% ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT