ADVERTISEMENT

சேலம் வந்த இந்தோனேஷிய மத போதகர்களுடன் தொடர்பில் இருந்த 25 ஆயிரம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை!

08:49 AM Apr 02, 2020 | santhoshb@nakk…


இந்தோனேஷியாவில் இருந்து மத பரப்புரைக்காக முஸ்லிம் மத போதகர்கள் 11 பேர் கொண்ட குழுவினர், கடந்த மார்ச் 11ம் தேதி சேலம் வந்திருந்தனர். அவர்கள் சூரமங்கலம், கருங்கல்பட்டி, கிச்சிப்பாளையம், சன்னியாசிக்குண்டு, செவ்வாய்ப்பேட்டை, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மசூதிகளில் மத பரப்புரையில் ஈடுபட்டு வந்தனர்.

ADVERTISEMENT

கரோனா தாக்கம் நாளுக்கு நாள் வேகமெடுத்து வந்த நிலையில், இந்தோனேஷிய குழுவினர் சேலத்தில் உலா வருவது சுகாதாரத்துறைக்கு மிக தாமதமாகவே தெரிய வந்தது. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்தோனேஷிய குழுவினரைப் பரிசோதனை செய்ததில், அவர்களில் 5 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT


இதையடுத்து அவர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தனிமை வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, மத பரப்புரைக்காக அவர்கள் சென்று வந்த பகுதிகள், சந்தித்த நபர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள 25 ஆயிரம் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, அவர்களிடமும் கரோனா வைரஸ் தொற்று குறித்த பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. சேலம் மாநகரில் 5 கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள வீடுகளில் இந்தப் பரிசோதனை நடந்து வருகிறது.

கிச்சிப்பாளையம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட சீனிவாசா நகர், சன்னியாசிக்குண்டு, களரம்பட்டி, எருமாபாளையம் உள்ளிட்ட ஆறு இடங்களில் சாலைகளில் தடுப்புகள் அமைத்து, சீல் வைக்கப்பட்டு உள்ளது. பொன்னம்மாபேட்டை, அம்மாப்பேட்டை பகுதிகளிலும் மசூதிகளைச் சுற்றியுள்ள வழித்தடங்களில் தடுப்புக்கட்டைகள் அமைத்து, ஆள்கள் நடமாட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடுப்பு வேலிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து ஆள்கள் வெளியேறவும், வெளியாள்கள் உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

எனினும், காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கு மட்டும் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்தோனேஷிய மத போதகர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் ஊழியர்கள் கொண்ட 475 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இக்குழுக்களில் 2000 பேர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT