ADVERTISEMENT

‘ட்ரான்ஸ் கிச்சன்’ கொலை வழக்கு குற்றவாளியின் வாக்குமூலம்!

12:13 PM Oct 23, 2020 | tarivazhagan

ADVERTISEMENT


கோவை ‘ட்ரான்ஸ் கிச்சன்’ உணவக உரிமையாளர் திருநங்கை சங்கீதா கொலை வழக்கில் 23 வயதுடைய நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சங்கீதாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் அதற்கு சங்கீதா காவல்துறையில் புகார் கொடுத்துவிடுவேன் எனத் தெரிவித்ததால் அவரை கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

‘ட்ரான்ஸ் கிச்சன்’ உணவக உரிமையாளர் திருநங்கை சங்கீதா, கோவை சாய்பாபா காலனியில் வசித்துவந்துள்ளார். இவர் ஆர்.எஸ். புரம் பகுதியில் திருநங்கைகளுக்காக ட்ரான்ஸ் கிச்சன் என்ற பெயரில் பிரத்தியேக உணவகத்தை நடத்திவந்தார். இந்த உணவகத்தில் மூன்றாம் பாலினத்தவர்களே பணியில் இருந்துள்ளனர்.


இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை, உணவகத்தில் வேலை செய்யும் ஒருவருடன் தொலைப்பேசியில் கடைசியாகப் பேசியுள்ளார். அதற்குப் பிறகு அவரை தொடர்புகொள்ள முடியாமல் அவரது உணவகப் பணியாளர்கள் இருந்துள்ளனர். அவர் எங்காவது ஊருக்குச் சென்றிருப்பார் என அவர்கள் நினைத்துள்ளனர். ஆனால், இரண்டு நாட்களாக அவரை தொடர்புகொள்ள முடியாததால், புதன்கிழமை காலை அவரது வீட்டிற்குச் சென்று அவரது நண்பர்கள் பார்த்துள்ளனர். அப்போது அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. அதனால், அவர்கள் சாய்பாபா காலனி காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.


அதனைத் தொடர்ந்து அங்குவந்த காவல்துறையினர். சங்கீதாவின் வீட்டிற்குள் சென்று துர்நாற்றம் எங்கிருந்து வருகிறது எனத் தேடி பார்த்தபோது, தண்ணீர் பிடித்துவைக்கும் பிளாஸ்டிக் டிரம்மில் இருந்து வருவதை உணர்ந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அதை சோதனை செய்தபோது, சங்கீதாவின் உடல் அதில் இருந்தது தெரியவந்தது. அவரது உடலில் பல்வேறு பகுதிகளில் காயங்களும், கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்ட காயமும் இருந்துள்ளது. இதனால் இதை கொலை வழக்காக போலீஸார் பதிவு செய்து, சங்கீதாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த கொலை வழக்குத் தொடர்பாக சாய்பாபா காலனி காவல் துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்திவந்தனர். அதில் தற்போது நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி பகுதியைச் சேர்ந்த, ராஜேஷ் (23) என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பிடிப்பட்ட அந்த நபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தனது முகநூல் மூலம் சங்கீதா மற்றும் அவர் நடத்தி வரும் உணவகம் குறித்து தெரியவந்தது. அதன்மூலம் தனக்கு வேலை வேண்டும் எனக் கூறி சங்கீதாவிடம் பேசியுள்ளார். பிறகு அவரது உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். அதன்பிறகு சங்கீதாவுக்கு பாலியல் ரீதியாகத் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால், காவல்துறையிடம் புகார் தந்துவிடுவேன் என சங்கீதா தெரிவித்துள்ளார். அதானால், அவரை கொலை செய்தேன். பின் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் டிரம்மில் சங்கீதாவின் உடலை மறைத்து வைத்தேன் எனத் தெரிவித்துள்ளார். காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT