
சார், “சீட்டாட்டம் விளையாடலாம் வா..” என மர்ம நபர்கள் ஃபோனில் எங்களை அழைக்கிறார்கள் எனக் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினத்திடம் சிலர் புகார் அளித்துள்ளனர். அதே சமயம், கோவையில் சீட்டுக்கொண்டு சூதாட்டம் நடந்துவருவதாக காவல்துறைக்கும் ரகிசியத் தகவல் வந்துள்ளது.
கோவை மாவட்ட எஸ்.பி., புகார் வந்ததைத் தொடர்ந்து கோட்டூர் தனிப்படை உதவி ஆய்வாளர் முரளி தலைமையில், தனிப்படை அமைத்து, சூதாட்டத்தில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். எஸ்.பி.யின் உத்தரவின் பேரிலும், காவல்துறைக்கு ஏற்கனவே கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையிலும் காவல்துறையினர் தங்களது விசாரணையைத் துவங்கினர்.

இத்தனிப்படையின் விசாரணையில், கோவை மாவட்டம், பொள்ளாச்சி கெங்கம் பாளையத்தில் சீட்டாட்டம் நடப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கோட்டூர் தனிப்படை உதவி ஆய்வாளர் முரளி தலைமையிலான தனிப்படையினர் கெங்கம்பாளையம் பகுதிக்குள் நுழைந்தனர். அங்கே சட்டத்திற்கு விரோதமாக வெட்டாட்டம் என்னும் சூதாட்டம் விளையாடிய 11 நபர்களைப் பிடித்தனர். பின்னர் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்த 1,42,450 ரூபாயைப் பறிமுதல் செய்தனர். மேலும் சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை கோட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கோட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்வேல் பெருமாள், கைது செய்யப்பட்டுள்ள 11 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.