ADVERTISEMENT

மாற்றுத்திறனாளி மாணவரிடம் கறார் காட்டிய அரசுப் பேருந்து நடத்துநர்

04:46 PM Nov 16, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரசுப் பேருந்தில் கண் பார்வையில்லாத கல்லூரி மாணவரிடம் பயணக் கட்டணம் கேட்ட நடத்துநரிடம் அடையாள அட்டையைக் காட்டியும் மதிப்பில்லை. டிக்கெட் எடுக்கவில்லை என்றால் இறக்கி விடுவேன் என்று கறார் காட்டிய கொடுமை நடந்துள்ளது. பிறகு டிக்கெட் வாங்கி பயணம் செய்துள்ளார் அந்த மாற்றுத்திறனாளி மாணவர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகில் உள்ள முக்கண்ணாமலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முகமது ரபீக் மகன் முகமது பாசில் (வயது 19). இவர் பார்வை மாற்றுத்திறனாளி. கண்பார்வையற்றோர் பள்ளிகளில் படிப்பை முடித்து தற்போது புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் பி.ஏ இரண்டாமாண்டு படித்து வருகிறார்.

கண் பார்வை மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, பஸ் பாஸ் ஆகியவை வைத்திருந்தவர் சில மாதங்களுக்கு முன்பு பஸ் பாஸ் காணாமல் போனதால் புதிய பஸ் பாஸ்-க்கு விண்ணப்பித்தும் கிடைக்காத நிலையில் அடையாள அட்டையைப் பயன்படுத்தி பஸ் பயணம் செய்ய அதிகாரிகள் வலியுறுத்தினர். எனவே மாற்றுத்திறனாளி அடையாள அட்டையைக் காண்பித்து கல்லூரிக்குச் சென்று வந்தார்.

அதேபோல இன்று கல்லூரிக்குச் சென்ற மாணவர் பாசில், மதியம் ஒரு மணிக்கு வீட்டிற்குச் செல்வதற்காகப் புதுக்கோட்டையிலிருந்து அன்னவாசல் வழியாக மணப்பாறை செல்லும் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார். அந்த பஸ் நடத்துநர் வந்து டிக்கெட்டுக்கு பணம் கேட்டபோது தனது அடையாள அட்டையைக் காட்டி பாஸ் என்று பாசில் கூறியுள்ளார். “பாஸ் கிடையாது டிக்கெட் வாங்கினால் பயணம் இல்லையென்றால் இறக்கி விடுவேன்” என்று நடத்துநர் கூறியதாகக் கூறப்படுகிறது. அதனால் தன்னிடம் இருந்த பணத்தை எடுத்துக் கொடுத்து டிக்கெட் வாங்கிப் பயணம் செய்த மாணவர் பாசில் காலாடிப்பட்டி சத்திரத்தில் இறங்கியுள்ளார். பேருந்திலிருந்து இறங்கிய மாணவர் நடந்தவற்றை உறவினர்களிடம் கூறி கண் கலங்கியுள்ளார். பார்வை மாற்றுத்திறனாளியிடம் அடையாள அட்டை இருந்தும் டிக்கெட் வாங்கவில்லை என்றால் இறக்கிவிடுவேன் என்று மனிதாபிமானமில்லாமல் கறார் காட்டிய நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் அவரது பெற்றோர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT