ADVERTISEMENT

கல்லூரி மாணவர்கள் மோதல்; ஒருவர் கொலை! ஆறு பேர் கைது! 

06:29 PM Jul 21, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகில் உள்ள டி. எடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் அருண்குமார்(21). மாற்றுத்திறனாளியான இவர், விழுப்புரம் அரசு கலை கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று கடந்த 9ம் தேதி காணாமல் போனது. இதில் அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன்மீது சந்தேகம் எழுந்தது. அந்த சிறுவன் சென்னை ஹோட்டலில் வேலை செய்து வருபவர்.

இதையடுத்து அருண்குமார் மற்றும் அவரது உறவினர்கள் சிறுவனிடம் பைக் திருடு போனது குறித்து கேட்டுள்ளனர். இதனால் இது தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி அந்த சிறுவன் மற்றும் அவனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தபோது சிறுவன் போதையில் அருண்குமார் இருசக்கர வாகனத்தை திருடி விற்று விட்டதாக கூறியுள்ளார்.

இதனை தனது நண்பர்கள் மூலம் அருண்குமார் அறிந்துள்ளார். மேலும், அந்த ஆடியோவை அவரும் பெற்றுள்ளார். மீண்டும் சிறுவனிடம் திருடிய வாகனத்தை தரவில்லை என்றால் போலீஸில் புகார் செய்வோம் என்று தெரிவித்துள்ளனர். இதில், இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு அவர்கள் கலைந்து சென்றுள்ளனர்.

அதன்பிறகு சிறுவன், தனது நண்பார்களான சத்யராஜ்(21) மற்றும் 17 வயது மற்றொரு சிறுவனுடன் இணைந்து அருண்குமாருக்கு போன் செய்து, ‘வாகனம் பனப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரிக்கரை பகுதியில் உள்ளது. அங்கு வந்தால் வாகனத்தை எடுத்துக் கொள்ளலாம்’ என்று கூறி அருண்குமாரை அங்கு வரவழைத்துள்ளனர். அங்கு வந்த அருண்குமாரை நாலு பேரும் சேர்ந்து தாக்கி பெல்ட் மூலம் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். பின் அவர் உடலில் கற்களை கட்டி அருகில் இருந்த கிணற்றில் சடலத்தை வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

வீட்டில் இருந்து வெளியே சென்ற அருண்குமார், வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை என்பதை அறிந்த அவரது பெற்றோர், அதிர்ச்சி அடைந்து பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். எங்கும் அருண்குமார் கிடைக்காததால், திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் போலீஸ் நடத்திய விசாரணையில் சத்யராஜ் மற்றும் சிறுவர்கள் மூன்று பேரும் சேர்ந்து அருண்குமாரை கொலை செய்து கிணற்றில் வீசியதை ஒப்புக்கொண்டனர். மேலும் இந்தக் கொலையில் ராஜேஷ்(21), மற்றும் 17 வயது சிறுவன் ஈடுபட்டிருப்பது அந்த விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து நேற்று காலை 7:30 மணி அளவில் அருண்குமாரின் உடலை கிணற்றிலிருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில், கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறி நேற்று காலை 8 மணி அளவில் இடையார் பஸ் நிறுத்தம் அருகே அருண்குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த விழுப்புரம் டி.எஸ்.பி செல்வகுமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு, பார்த்தசாரதி மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT