Skip to main content

சீசனுக்கு தகுந்தார்போல் ரூட்டை மாற்றும் திருடர்கள்! 

Published on 06/11/2021 | Edited on 06/11/2021

 

Thieves who change the root as the season deserves!

 

சீசனுக்கு தகுந்ததுபோல், திருடர்களும் தங்களது திருட்டு தொழிலை மாற்றிக்கொண்டுள்ளனர். தற்போது தீபாவளி நேரம் என்பதால் பெரும்பாலான மக்கள் அசைவம் விரும்பி சாப்பிடுவார்கள். அதற்காக மாமிச கடைகளில் மாமிசம் வாங்குவதற்காக கூட்டம் அலைமோதும். அதற்கேற்றவாறு திருடர்களும் தங்களது திருட்டுத் தொழிலை வித்தியாசமான முறையில் நடத்தியுள்ளனர். 

 

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே உள்ள முப்புளி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர், தனது வீட்டின் அருகில் உள்ள கொட்டகையில் தீபாவளிக்கு முன்தினம் (03.11.2021) இரவு ஆடுகளை அடைத்து வைத்துள்ளார். ஆடுகளைக் கொட்டகையில் அடைத்துவிட்டு வீட்டில் உறங்கச் சென்றுவிட்டார். நேற்று அதிகாலை எழுந்து வெளியே வர அவர் முயற்சித்தபோது, அவர் வீட்டின் கதவு வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அவர் சத்தம் போட்டுள்ளார். அச்சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து அவரது வீட்டுக் கதவைத் திறந்துள்ளனர். வெளியே வந்த அவர், ஆட்டுக் கொட்டகைக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த 5 ஆடுகள் மாயமாகி இருந்தன. இவர் இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது இவரது வீட்டை வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போட்டுவிட்டு 5 ஆடுகளைத் திருடர்கள் களவாடிச் சென்றுள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்,  மைலம் போலீஸில் புகார் செய்தார். 

 

அதேபோன்று பெரமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமியும் தனது வீட்டின் எதிரே மூன்று ஆடுகளைக் கட்டிவிட்டு அன்று இரவு வீட்டுக்குள் உறங்கச் சென்றுள்ளார். காலையில் வந்து பார்த்தபோது அவரது மூன்று ஆடுகளையும் களவாடிச் சென்றுள்ளனர். அவரும் மைலம் காவல் நிலையத்திற்குச் சென்று தனது ஆடுகளைக் களவாடிச் சென்றது குறித்து புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து மைலம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து ஆடு திருடர்களைத் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்