ADVERTISEMENT

பொங்கல் பரிசுத்தொகுப்பு 21 அல்ல; இருபதுதானாம்... துணிப்பை மட்டும் மிஸ்ஸிங்! ரேஷன் கார்டுதாரர்கள் அதிருப்தி!

09:32 AM Jan 07, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பொங்கல் பரிசுத்தொகுப்பில் முழு கரும்பு உள்பட மொத்தம் 21 பொருள்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், துணிப்பை மட்டும் விடுபட்டதால் ரேஷன் கார்டுதாரர்கள் அதிருப்தி அடைந்தனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் அரிசி பெற தகுதியுடைய 2.15 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஜன. 4) சென்னையில் தொடங்கி வைத்தார்.

இந்த பரிசுத்தொகுப்பில் பச்சை அரிசி, வெல்லம், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், நெய், மிளகு, புளி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்தம்பருப்பு, உப்பு, ரவை, கோதுமை மாவு, முந்திரிப்பருப்பு, உலர் திராட்சை, ஏலக்காய், முழு கரும்பு ஆகிய இருபது வகையான பொருள்களுடன் அவற்றை கொண்டு செல்ல ஒரு துணிப்பை என மொத்தம் 21 பொருள்கள் அடங்கும்.

திட்டமிட்டபடி ஜன. 4ம் தேதி முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணிகள் தொடங்கின. கூட்ட நெரிசலைத் தவிர்க்க, முன்கூட்டியே டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. சமூக இடைவெளியும் கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளன.

கரும்புகளை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். குறைந்தட்சம் 6 அடி நீள கரும்பாக இருப்பதுடன், சன்னமாக இல்லாமல் தடிமனாக இருக்க வேண்டும். கரும்புகள் காய்ந்து போகாமல் இருக்க படிப்படியாக கொள்முதல் செய்து கொள்ள வேண்டும். முகக்கவசம் அணியாமல் வரும் கார்டுதாரர்களுக்கு ரேஷன் கடைகளிலேயே முகக்கவசம் விநியோகம் செய்ய வேண்டும் என இத்திட்டத்தை பக்காவாக செயல்படுத்த தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால், பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்கப்படுவதாகச் சொல்லப்பட்ட துணிப்பை மட்டும் வழங்கப்படவில்லை. இதனால், ரேஷன் கார்டுதாரர்களே வீட்டில் இருந்து பைகளை எடுத்துச்சென்று பொங்கல் பரிசுத்தொகுப்பைப் பெற்றுக்கொண்டனர்.

இந்த விவரம் தெரியாத கார்டுதாரர்கள் பலர், வெறும் கையுடன் சென்ற நிலையில், அவர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் கார்டுதாரர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். பரிசுத்தொகுப்பைப் பெற்றுச்சென்ற கார்டுதாரரர்கள் மொத்தம் 20 பொருள்களா? 21 பொருள்களா? எனத் தெரியாமல் குழம்பினர். துணிப்பை கொடுக்கப்படாததால் இவ்வாறு குழப்பம் அடைந்தனர்.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 10.50 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டத்திலும், ஒரு சில கடைகளில் மட்டும் பெயரளவுக்கு துணிப்பை வழங்கப்பட்டு உள்ளது. துணிப்பை கொடுக்கப்படாதது குறித்து சமூக ஊடகங்களிலும் கார்டுதாரர்கள் தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், 6 அடி முழு கரும்பு வழங்கப்படும் என அரசு கூறினாலும், கடைகளில் கொள்முதல் 4 அடி நீளமுள்ள கரும்புகள்தான் அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் கார்டுதாரர்கள் அதிருப்தியுடன் கூறினர்.

இது தொடர்பாக சேலம் மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதனிடம் கேட்டபோது, ''பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான துணிப்பை இதுவரை 32 சதவீதம் மட்டும்தான் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளரிடம் கேளுங்கள்'' என்றார்.

இதையடுத்து நாம் சேலம் மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் சிவக்குமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ''போதிய அவகாசம் இல்லாததால் துணிப்பைகளை உடனடியாக தயாரிக்க முடியவில்லை. இப்போதைக்கு கைவசம் இருந்த துணிப்பைகளை கடைகளுக்கு அனுப்பி விட்டோம். பைகள் தயாரித்து வர வர, கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நான் தற்போது ஆய்வுப்பணிகளில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன்'' என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.

துணிப்பை உற்பத்தியில் தொய்வு ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து நுகர்பொருள் வாணிபக்கழக வட்டாரத்தில் விசாரித்தோம். ''பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருள்களை கொண்டு செல்வதற்கான துணிப்பைகள் தயாரிக்கும் பணிகள் இந்தமுறை மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தரப்பட்டுள்ளது. பல இடங்களிலும் உள்ள குழுக்களுக்கு இப்பணிகள் வழங்கப்பட்டுள்ளதால், தயாரான பைகளை ஒரே நேரத்தில் சேகரித்துக்கொண்டு கடைகளுக்கு எடுத்துச் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், மகளிர் குழுக்களாலும் வேகமாக துணிப்பைகளை தைத்துக் கொடுக்க முடியவில்லை.

சேலம் மாவட்டத்திற்கான மொத்த தேவையில் இதுவரை சுமார் 3 லட்சம் துணிப்பைகள்தான் தயாரித்து கடைகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டு உள்ளன. ஒரு பை தயாரிக்க ஜிஎஸ்டி வரியுடன் 32 ரூபாய் செலவாகிறது. ஓரிரு நாள்களுக்குள் அனைத்து கடைகளுக்கும் பைகள் அனுப்பி வைக்கப்பட்டு விடும். துணிப்பை இல்லாமல் பொருள் வாங்கிய கார்டுதாரர்களுக்கு பின்னர் இந்தப்பை வழங்கப்பட்டு விடும்'' என்றனர்.

பொங்கல் பரிசுத்தொகுப்புக்காக தயாரிக்கப்பட்ட துணிப்பை, தரமான காடா துணியில் தைக்கப்பட்டு உள்ளது. இந்தப் பை, ஒரே நேரத்தில் சுமார் 5 கிலோ எடை வரை தாங்கும். பையின் ஒருபுறத்தில் காளை, கரும்பு படத்துடன் முதல்வரின் பொங்கல் வாழ்த்துச் செய்தியும், மற்றொரு புறத்தில் அரசின் திட்டம் குறித்தும் அச்சிடப்பட்டு உள்ளது. முதல்வரின் படம் அச்சிடப்படவில்லை. துணி தரமானதாக இருக்கும் அதேநேரம், தையல் வேலைகள் பெயரளவுக்கு மட்டுமே செய்யப்பட்டு உள்ளன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT