ADVERTISEMENT

ஆய்வுக்கு வந்த ரயில்வே அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

07:08 PM Feb 22, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

பேராவூரணியில் ரயில் பாதையை ஆய்வு செய்ய வந்த ரயில்வே அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ரயில்வே அதிகாரிகளை காவல்துறையினர் வந்து மீட்டதால் பரபரப்பு நிலவியது.

ADVERTISEMENT

காரைக்குடி- திருவாரூர் அகல இரயில்பாதை பணிகளுக்காக கடந்த 5 ஆண்டுகளாக காரைக்குடி-திருவாரூர் இடையே ரயில் சேவை நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையில் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் ஏறத்தாழ நிறைவடைந்துள்ளது.

தற்போது பேராவூரணியில் நீலகண்டபுரம் செல்லும் வழியில் உள்ள நூறாண்டுகள் பழமை வாய்ந்த ஆளில்லா ரயில்கேட்டை நிரந்தரமாக தடுப்பு அமைத்து மூடிவிட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த ரயில்வே கேட்டை மூடினால் இவ்வழியே அமைந்துள்ள குடியிருப்புகள், மருத்துவமனை, அரசு தொடக்கப்பள்ளி ஆகியவற்றிற்கு பொதுமக்கள் செல்லமுடியாத நிலை ஏற்படும்.

மேலும் இவ்வழியே 30 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்படுவதாகவும் கூறி, இந்த ரயில்வே கேட்டை (எண்- எல்.சி.21) மூடக்கூடாது என குழு அமைத்து போராடி வருகின்றனர். மேலும் மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பிக்கள், அரசியல் கட்சியினர், ஆட்சியர், கோட்டாட்சியர் உள்ளிட்ட பலரையும் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். ரயில்வே கேட்டை மூடும் முடிவை கைவிட வலியுறுத்தி வரும் பிப் 28 ஆம் தேதி பேராவூரணி பேருந்து நிலையம் அருகில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் சாலை மறியலும், தொடர்ந்து ரயிலை இயக்கினால் ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்போவதாக போராட்டக்குழு தலைவர் வழக்கறிஞர் எஸ்.மோகன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ரயில்வே உயரதிகாரிகள் புதன்கிழமை மாலை 7 மணி வாக்கில் குடை வண்டியில் (டிராலி) அமர்ந்து ரயில்பாதை ஆய்வில் ஈடுபட்டனர். இதையறிந்த இப்பகுதியை சேர்ந்த 300 பெண்கள் உள்ளிட்ட 500 பேர் டிராலியை மறித்து, தடுத்து நிறுத்தி அதிகாரிகளை முற்றுகையிட்டு, ரயில்வே கேட்டை மூடக்கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி காவல்துறை ஆய்வாளர் ஜனார்த்தனன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், ரயில்வே உயர் அலுவலர்களை மீட்டு, வட்டாட்சியர் அலுவலகம் அழைத்து சென்றனர்.

பின்னர் வட்டாட்சியர் முன்னிலையில் ரயில்வே அதிகாரிகள் ரவிக்குமார், மனோகர், ஜான் பிரிட்டோ, ரயில்வே ஒப்பந்ததாரர் பிரசாத் ரெட்டி மற்றும் பொதுமக்கள் சார்பில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன், கணேசன் சங்கரன், பழனிவேலு சங்கரன், முகமது யாசின், எஸ்.சத்தியமூர்த்தி, ராஜா, செந்தில்குமார், தங்கவேலு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

முடிவில் இதுகுறித்து உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிப்பதாகவும், மற்ற விசயங்கள் குறித்து வரும் பிப் 24 ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள சமாதான பேச்சுவார்த்தையில் பேசி முடிவு செய்யலாம் என வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் தெரிவித்தையடுத்து பிரச்சினை முடிவுக்கு வந்தது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT