ADVERTISEMENT

பச்சிளம் குழந்தைகள் கூவிக்கூவி விற்பனை! யார் யாருக்கு தொடர்பு? ராசிபுரம் நர்சிடம் விசாரணை!!

08:07 PM Apr 25, 2019 | elayaraja

பச்சிளம் குழந்தைகளை சிவப்பு, கருப்பு, மாநிறம், ஒல்லியான தேகம், கொழு கொழு ரகம் என குழந்தைகளை தரம் பிரித்து விற்பனை செய்து வரும் செவிலியர் உதவியாளர் பற்றி வெளியான தகவல்கள், தமிழகத்தை உலுக்கி எடுத்துள்ளது.

ADVERTISEMENT

நமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் அமுதா. ராசிபுரம் அரசு மருத்துவமனையில் செவிலியர் உதவியாளராக பணியாற்றி வந்தவர் அமுதா. விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார். அவர் பணியில் இருந்த காலம் முதலே, தவறான உறவில் பிறக்கும் குழந்தைகள் மற்றும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களிடம் இருந்து குழந்தைகளை கடத்தியோ, அல்லது விலைக்கு வாங்கியோ குழந்தையில்லா தம்பதிகளிடம் விற்பனை செய்து வந்துள்ளார்.

ADVERTISEMENT

இதையறிந்த குழந்தையில்லா தம்பதியான தர்மபுரியைச் சேர்ந்த சதீஸூம் அவருடைய மனைவியும் அமுதாவிடம் தங்களுக்கு ஒரு பெண் குழந்தையை விலைக்குக் கொடுக்குமாறும், அதற்கு உரிய தொகையை கொடுத்து விடுவதாகவும் ஏற்கனவே கேட்டுள்ளனர். இது தொடர்பாக சதீஸ், அமுதாவிடம் செல்போனில் பேசிய உரையாடல் பதிவு சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அமுதாவிடம் பேசியவர் பெயர் உண்மையிலேயே சதீஸ்தானா என்பது நம்மால் உறுதிப்படுத்த இயலவில்லை. ஆனால், அமுதா சொல்லும் தகவல்கள் அனைத்தும் பகீர் ரகம்.

அந்த உரையாடலில், ''பெண் குழந்தைகள் என்றால் 2.70 லட்சம் முதல் 3 லட்சம் வரை போகும். கருப்பான ஆண் குழந்தைகள் என்றால் 3 லட்சம் ரூபாயும், அதுவே குண்டாக கொழு கொழு என்று அமுல் பேபி மாதிரி இருக்கும் குழந்தைகள் என்றால் முதல் 4.25 லட்சம் ரூபாய் வரை விலை போகும்,'' என்கிறார் அமுதா.

மேலும், கடந்த 30 வருடமாக குழந்தையில்லாத தம்பதிகளுக்கு குழந்தைகளை எடுத்துக் கொடுத்து வருவதாகவும் கூறுகிறார். அதாவது குழந்தைகளை சட்ட விரோதமாக பெற்று கைமாற்றி விடுவதை 'எடுத்துக் கொடுத்துட்டு இருக்கேன்' என்கிறார். இப்படிச் செய்வது தவறு என்ற உறுத்தலோ என்னவோ, இதன்மூலம் கிடைக்கும் தொகையில் கொஞ்சமே கொஞ்சம் கிள்ளி ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கும், கோயிலில் அன்னதானத்திற்கும் செலவு செய்து விடுவேன் என்றும் அந்த உரையாடலின்போது சொல்கிறார் அமுதா.

இந்த செல்போன் பேச்சுகள் ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் உடனடியாக விசாரணையில் இறங்கினர். தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷூம் இதுகுறித்து விசாரிக்க வியாழக்கிழமை (ஏப்ரல் 25) உத்தரவிட்டார். ராசிபுரம் டிஎஸ்பி விஜயராகவன் தலைமையிலான தனிப்படையினர், அமுதாவிடம் நேரில் விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

நாமும் சுகாதாரத்துறை, காவல்துறை வட்டாரங்களில் அமுதாவைப் பற்றி விசாரித்தோம்.

நாமக்கல் மாவட்டம் விஐபி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் அமுதா. ராசிபுரம் அரசு மருத்துவமனையில் செவிலியர் உதவியாளராக பணியாற்றி வந்திருக்கிறார். கடந்த 2012ம் ஆண்டு, விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இவருடைய கணவர் ரவிச்சந்திரன். கூட்டுறவு நகர வங்கியில் உதவியாளராக பணியாற்றுகிறார்.

குழந்தை வேண்டும் தம்பதியர், என்ன குழந்தை வேண்டும் என்று அமுதாவிடம் முதலில் சொல்லிவிட வேண்டும். அதற்காக 30 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தினால்தான் அதற்கான முயற்சிகளில் அமுதா இறங்குவாராம். இந்த நெட்வொர்க்கில் அமுதா மட்டுமே கிடையாது என்பதுதான் அதிர்ச்சியான விஷயம் என்கிறது காவல்துறை. சொல்லப்போனால் அமுதாவும் ஓர் இடைத்தரகர்தானாம். இவரைப்போல இன்னும் சிலரின் கைகளைக் கடந்தே பேரம் பேசப்படும் தொகை, குழந்தையை கொடுக்க சம்மதிக்கும் பெற்றோருக்குப் போய்ச்சேர்கிறது.

முதல்கட்ட விசாரணையில், இரண்டு குழந்தைகளை இவ்வாறு விற்றுக் கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. ஒரு குழந்தையை முறையாக பெற்றோரிடம் பேசி சட்டப்படி தத்து கொடுக்கப்பட்டதாகவும், அதில் அமுதா தரகு வேலை மட்டும் பார்த்ததாகவும் தெரிய வந்துள்ளது. அந்த குழந்தை சட்டப்படி தத்து எடுக்கப்பட்டது பத்திரப்பதிவுத்துறையிலும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், அதை காவல்துறையினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இன்னொரு குழந்தையை, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கும் நாமக்கல் பேருந்து நிலையத்திற்கும் இடைப்பட்ட ஓர் இடத்தில் வைத்து குழந்தையில்லா தம்பதியிடம் கைமாற்றி சட்ட விரோதமாக கைமாற்றி விட்டதும் தெரிய வந்திருக்கிறது.

இவ்விரண்டுமே பெண் குழந்தைகள். அப்போது இதற்காக, குழந்தையில்லா தம்பதியினரிடம் இருந்து தலா 1.50 லட்சம் ரூபாய் வரை பெறப்பட்டதாக அமுதா, காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார். கூடுதல் தொகையை பேரம் பேசுவோம். ஆனால் கடைசியில் இரண்டு லட்சம் ரூபாய்க்குள்தான் வியாபாரம் படியும் எனவும் கூறியுள்ளார். இத்தகவலை எல்லாம் அவர், எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல்தான் காவல்துறையிலும் சொல்லி இருக்கிறார். ஏதோ கால்நடைச்சந்தையில் ஆடு, மாடுகளை பேரம் பேசுவது போலதான் குழந்தைகளுக்கும் அமுதா பேரம் பேசி வந்துள்ளார் என்கிறது காவல்துறை.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட எஸ்.பி. அருளரசுவிடம் கேட்டபோது, ''முதல்கட்ட விசாரணையில், இரண்டு குழந்தைகளை அவர் விற்பனை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. ஆனாலும் எவ்வளவு தொகைக்கு அவர் விற்பனை செய்தார் என்பதை முன்னுக்குப்பின் முரணாக பேசுகிறார். அவர் நேரடியாக யாரையும் சந்தித்ததில்லை என்றும் கூறுகிறார். 50 ரூபாய் கட்டணத்தில் ஆன்லைனில் பதிவு செய்தாலே பிறப்புச்சான்றிதழ் பெற்று விடலாம் எனும்போது, அதற்காக 70 ஆயிரம் ரூபாய் அமுதா பேரம் பேசியிருக்கிறார். இதெல்லாம் ஏமாந்தவர்களிடம் பணம் பிடுங்குவதற்காகவும் இப்படி அவர் பேசியிருக்கலாம் என கருதுகிறோம். எனினும், இதில் இன்னும் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது குறித்து இன்னும் விசாரிக்க வேண்டியுள்ளது,'' என்றார்.

இது ஒருபுறம் இருக்க, நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை தரப்பில் விசாரித்தபோது, செவிலியர் உதவியாளர் அமுதா, முதன்முதலில் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் வேலை செய்துள்ளார். அதன்பிறகு திருச்செங்கோட்டிலும், கடைசியாக ராசிபுரம் அரசு மருத்துவமனையிலும் பணியாற்றியிருக்கிறார். பள்ளிபாளையத்தில் பணியில் இருக்கும்போதே அவர் மீது சில குற்றச்சாட்டுகளின் பேரில்தான் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், அவர் மீது துறையில் நல்ல அபிப்ராயம் இல்லை என்றும் கூறுகின்றனர்.

அமுதா மற்றும் அவருடைய கணவர் ரவிச்சந்திரன் ஆகிய இருவரிடமும் மாலை வரை விசாரணை நடந்தது. விசாரணை முடிவில் அமுதா கைது செய்யப்பட்டுள்ளார். விரிவான விசாரணைக்காக அவர் விரைவில் காவலில் எடுக்கப்படலாம் எனத்தெரிகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT