ADVERTISEMENT

காணாமல்போன குழந்தை 29 அடி ஆழ கிணற்றுக்குள் இருந்து மீட்பு...

05:38 PM May 17, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ளது மேல் சேவூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், சரண்யா தம்பதிகளுக்கு நட்சத்திரா என்ற 7 மாத பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணன், சரண்யா குழந்தை நட்சத்திரா ஆகிய மூவரும் புழுக்கம் காரணமாக வீட்டுக்கு வெளியில் காற்றோட்டத்திற்காகப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தனர்.

ADVERTISEMENT

நள்ளிரவு ஒரு மணி அளவில் தம்பதிகள் இருவரும் கண்விழித்துப் பார்த்தபோது குழந்தை நட்சத்திரா காணவில்லை. கிருஷ்ணனும் சரண்யாவும் திடுக்கிட்டனர், பதட்டம் அடைந்த இருவரும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை எழுப்பி தகவல் தெரிவித்ததோடு, ஊர் மக்களும் திரண்டு குழந்தையை ஊர் முழுக்க தேடியுள்ளனர். ஒரு மணி நேரம் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. குழந்தையைக் காணாமல் எல்லோரும் தவிப்புடன் இருந்த அந்த நேரத்தில் கிருஷ்ணன் வீட்டுக்கு சுமார் 500 மீட்டர் அருகில் உள்ள 29 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத பாழும் கிணற்றின் உள்ளே இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது.

பதறி அடித்துக்கொண்டு அந்தக் கிணற்றுக்குச் ஓடிச்சென்று டார்ச் லைட் வெளிச்சத்தினை பாய்ச்சி உள்ளே பார்த்தனர். கிணற்றின் உள்ளே குழந்தை நட்சத்திரா இருப்பது தெரியவந்தது. உடனடியாக சில இளைஞர்கள் பாதுகாப்பாகக் கிணற்றில் இறங்கி குழந்தையைப் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் அதன் உடலில் எந்தவிதமான காயங்களும் இல்லாமல் ஆரோக்கியத்துடன் இருந்தது எல்லோரையும் பெருமூச்சு விட வைத்தது.

பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை 500 மீட்டர் தூரம் உள்ள இரண்டரை அடி உயரம் சுற்றுச் சுவர் உள்ள கிணற்றுக்கு எப்படி விழுந்திருக்கும் என்ற கேள்விக்கு மத்தியில், குழந்தை மீட்கப்பட்டது கிராம மக்களுக்கு சந்தோஷத்தையும் வியப்பையும் அளித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT