ADVERTISEMENT

''முதல்வர் மேடையில் பேசியது அரசியல் நாடகம்''-அண்ணாமலை விமர்சனம்!

10:06 PM May 26, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரதமர் மோடி 31,500 கோடி ரூபாயில் 11 திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கும் நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் ஒரே மேடையில் அமர்ந்து விழாவில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் பிரதமர் பங்கேற்கும் முதல் நிகழ்வு இது. தமிழக வளர்ச்சிக்கான திட்டங்களை துவக்கி வைக்க வந்திருக்கும் பிரதமருக்கு நன்றி. சமூகநீதி, சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் என பல அம்சங்களை உள்ளடக்கியது தமிழக வளர்ச்சி. அனைவரையும் உள்ளடக்கிய இந்த வளர்ச்சியைத்தான் திராவிடம் மாடல் என்று குறிப்பிடுகிறோம். இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்களிப்பு முக்கியமானது. ஜி.எஸ்.டி இழப்பீடு காலத்தை இரண்டு ஆண்டு காலத்திற்கு நீட்டிக்க வேண்டும். வரியை பகிர்ந்தளிப்பதே உண்மையான கூட்டாட்சி. ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து நிறைவேற்றும் திட்டங்களில் சமமாக நிதி சுமையை ஏற்க வேண்டும்.

இந்திக்கு இணையாக தமிழை அலுவல் மொழியாகவும், வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும். தமிழக மீனவர்களின் முக்கிய பிரச்சனைக்கு தீர்வுகாணும் வகையில் கச்சத்தீவை மீட்டெடுத்து தமிழக மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்ட, உரிய நடவடிக்கை எடுக்க இதுவே தகுந்த தருணம் என பிரதமருக்கு நினைவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன். தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீடு தொகை 14 ஆயிரத்து 6 கோடி ரூபாயை விரைந்து வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். நீட் தேர்வுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இந்த கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை பிரதமர் உணருவார் என உளமார நம்புகிறேன்''என பேசியிருந்தார்.

இந்நிலையில் பிரதமரை மேடையில் வைத்துக்கொண்டு தமிழக முதல்வர் பேசியது அரசியல் நாடகம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இந்தியாவையும், தமிழகத்தையும் பிரதமர் தரம் பிரித்துப் பார்த்தது இல்லை. மத்திய அரசுக்கு தமிழகம் 25 ஆயிரம் கோடி அளிக்க வேண்டும். இதனை நிதியமைச்சரால் மறுக்க முடியுமா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT