கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடக மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘மோடி என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் எப்படி திருடர்களாக இருக்கிறார்கள்’ என்ற வகையில் பேசியிருந்ததாகக் கூறி பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி, குஜராத் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Advertisment

கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துகொள்ள அவருக்கு உடனடியாக பிணை வழங்கியும் உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து மக்களவை இணைச் செயலாளர் திரிபாதி வெளியிட்டுள்ள அறிக்கையில், சூரத் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வழங்கிய தீர்ப்பின்படி கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பின் 102(1)(e) விதிகளின்படி, அவர் தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து அதாவது மார்ச் 23, 2023 முதல் லோக்சபா உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Advertisment

ராகுல் காந்தி மீதான தகுதி நீக்க நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ராகுல் காந்தியின் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ''ராகுல் காந்தி மீது நடவடிக்கை என்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல். அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து இதனை எதிர்க்க வேண்டும். பதில் சொல்லாமல் கேள்வி கேட்பவரை அப்புறப்படுத்துவது ஒன்றிய அரசுக்குஅழகல்ல. இந்த தகுதி நீக்க நடவடிக்கைகள் மூலமாக ஜனநாயகம் என்றசொல்லை உச்சரிக்கும் தகுதியை பாஜக இழுந்து விட்டது. ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின்ஜனநாயக உரிமையை பறிப்பதாகும். தகுதி நீக்கம் செய்த பாசிச நடவடிக்கைக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்'' எனத்தெரிவித்துள்ளார்.