ADVERTISEMENT

இளையராஜாவை விமர்சிக்கக் கூடாது என முதல்வர் அறிவுரை - உதயநிதி ஸ்டாலின்

07:35 PM Apr 18, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா மோடி தொடர்பாக புகழ்ந்து எழுதியிருந்தார். அதில், " மேக் இன் இந்தியா திட்டம் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. நாட்டில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விரைவு எக்ஸ்பிரஸ் சாலைகள் போன்றவை உலகத் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சமூக நீதியைப் பொறுத்தவரை, பல்வேறு சட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி இருக்கிறார். இதுபோன்ற நரேந்திர மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளைக் கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார். அம்பேத்கரும், நரேந்திர மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இளையராஜாவின் இந்த முன்னுரை தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிடுவது தவறானது என்று ஒருதரப்பும், இல்லை அது சரியான கருத்து என்று மற்றொரு தரப்பும் சமூக வலைத்தளங்களில் இருவேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக திமுக பெயரை வெளிப்படையாக கூறாமல் பாஜக தலைவர் நட்டா, மற்றும் தமிழக தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்தில் அவர்களை விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், " இளையராஜா குறித்து எந்த கருத்தையும் கூறக் கூடாது என திமுகவினரை முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இளையராஜாவை நாகரிகமற்ற முறையில் விமர்சிப்பது நிச்சயம் தவறு. பிரதமர் மோடி குறித்து இளையராஜா கூறியது அவரின் தனிப்பட்ட கருத்து" என அவர் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT