ADVERTISEMENT

சேலம் - சென்னை பசுமை வழி சாலை விவகாரம்: ம.ஜ.க. நிலைப்பாடு என்ன?

11:34 AM Jun 28, 2018 | rajavel



சேலம் - சென்னை பசுமை வழி சாலை தொடர்பாக மனிதநேய ஜனநாயக கட்சியின் நிலைப்பாடு குறித்து அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது.

ADVERTISEMENT

அதில், சேலம்-சென்னை பசுமை வழி சாலை குறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் நிலைப்பாடு மிகத் தெளிவானது.

ADVERTISEMENT

நாங்கள் எந்த திட்டத்தையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதும் இல்லை, எதிர்ப்பதும் இல்லை. பிறரை திருப்திப்படுத்தும் அரசியலையும் முன்னெடுப்பதும் இல்லை. மாறாக மனசாட்சிக்கு விரோதமில்லாத வகையிலேயே பிரச்சனைகளை அணுகுகிறோம்.

நிலத்தை பாழ்படுத்தும் மீத்தேன், ஹைட்ரோ_கார்பன், நியூட்ரினோ போன்ற திட்டங்களையும் ஸ்டெர்லைட் போன்ற மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளையும் சமரசமின்றி எதிர்க்கிறோம்.

நிலம், நீர், காற்று இம்மூன்றின் இயற்கை தன்மை பாதிக்கப்படக்கூடாது என்ற வகையிலேயே எமது கொள்கை அணுகுமுறை உள்ளது. அதே நேரத்தில் வேலைவாய்ப்புகளை தரக்கூடிய சூழலை கெடுக்காத அனைத்து தொழிற் சாலைகளையும் வரவேற்கிறோம்.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அணைக்கட்டுகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், பெரிய மருத்துவ மனைகள், கல்விக்கூடங்கள், அகல விரைவுச் சாலைகள், ரயில்வே சாலைகள், பெரிய பாலங்கள் இவையெல்லாம் அவசியமானவை என்று வரவேற்கிறோம். இது போன்ற கட்டமைப்புகளை உருவாக்கும்போது, பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய இழப்பீட்டையும் மாற்று இடங்களையும் வழங்க வேண்டும் என்பதே எமது நிலைபாடாகும்.

இன்று பயன்பாட்டில் இருக்கும் இது போன்ற திட்டமைப்புகள் இந்த அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றன.

அந்த வகையில்தான் கம்பத்தில் இயக்குனர் கெளதமன் கைதை கண்டித்து தமிழக அரசுக்கு எதிராக நான் கருத்து கூறியபோது, சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கிறீர்களா? என செய்தியாளர்கள் கேட்டனர்.

அப்போது நாங்கள் அந்த திட்டத்தை முழுமையாக எதிர்க்கவில்லை, நாட்டின் வளர்ச்சிக்கு இதுபோன்ற சாலைகள் அவசியம், அதே நேரம் மத்திய மாநில அரசுகள் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும், விவசாயிகள் கேட்கும் முழுமையான நஷ்ட ஈட்டை வழங்கிவிட்டுத்தான் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கூறினேன்.

இதே நிலைப்பாட்டில் தான் அப்பகுதியில் வலிமையாக இயங்கி வரும் தமிழக கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு எம்எல்ஏவும் தொலைக்காட்சிகளில் கூறியுள்ளார்.

இதை "சேலம்-சென்னை சாலை திட்டம் தமிழக வளர்ச்சிக்கு முக்கியம் -"தமிமுன் அன்சாரி" என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதை எமது அரசியல் எதிரிகள் பரப்பி மகிழ்ந்துள்ளனர்.

எங்கள் கட்சியின் நிலைபாடு ஏற்கனவே கூறியுள்ளபடி தெளிவானது, விவசாயிகளின் உணர்வுகளை மதிக்காமல் இத்திட்டத்தை செயல்படுத்தக் கூடாது. மேலும் இதில் மாற்று வழி இருந்தால் அதை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். பிரச்சனைக்குரிய பகுதியில் மக்களின் கருத்தை கேட்டு கூட்டங்களை நடத்த வேண்டும். சூழல் கெடாமல், ஊழலுக்கு இடம் கொடுக்காமல் மக்களின் ஆதரவோடு தான் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதும், விவசாயிகளின் உரிமைகளுக்கு எதிராக செயல் படக்கூடாது என்பதும்தான் எமது நிலைபாடாகும் என அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT