ADVERTISEMENT

மெரினா நடைபாதை வியாபாரிகள், மீன் வியாபாரிகளை முறைப்படுத்த சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவு!

12:57 AM Nov 28, 2019 | santhoshb@nakk…

சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது குறித்தும், மெரினா கடற்கரையில் நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்துவது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT


சென்னை மெரினா கடற்கரையில் லூப் சாலையில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்துவது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், லூப் சாலையில் மீன் வியாபாரம் செய்யும் வியாரிகள் ஒழுங்குமுறைப்படுத்தும் பணிகள் நடந்து வருவதாகவும், அப்பகுதிக்கு அருகில் மீன் சந்தை கட்டி மாற்று இடம் வழங்குவதைப் பொறுத்தவரையிலும், மீன் வியாபாரிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக, அதிகாரிகள் தயக்கத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

ADVERTISEMENT

இதையடுத்து, சட்டம் ஒழுங்கு, பொது அமைதி பிரச்னைகளைப் பொறுத்தவரை உயர்நீதிமன்றத்திற்கு கவலை இல்லை எனவும், அதிகாரிகள் தங்கள் கடமைகளையும் பொறுப்புகளையும் செய்ய வேண்டியது கடமை என்றும் கூறிய நீதிபதிகள், லூப் சாலையில் மீன் வியாபாரிகளை முறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை காவல் துறை ஆணையர் உதவியுடன் மேற்கொள்ள சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டனர்.



சென்னை மாநகராட்சி ஆணையர், தன்னால் இப்பணிகளை மேற்கொள்ள இயலவில்லை என்றால் அதுபற்றி மனுவாகத் தாக்கல் செய்யலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், லூப் சாலையில் மீன் வியாபாரிகளை முறைப்படுத்தியது குறித்தும், மெரினா கடற்கரையில் நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்தியது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 19-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT