Skip to main content

“லட்சுமி நாகசங்கர் பழங்குடி வகுப்பை சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும்”- நீதிபதி உத்தரவு!

Published on 25/06/2021 | Edited on 25/06/2021
"Lakshmi Nagasankar must file evidence of belonging to a tribal class" - Judge orders

 

தேர்தல், கல்வி, அரசு வேலை வாய்ப்புகளுக்கு பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டு இடங்களை போலி சான்றிதழ் அளித்து மற்றவர்கள் தட்டிப்பறிப்பதை தடுக்க, பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான சாதிச்சான்றுகளை வழங்கும் அதிகாரியாக வருவாய் கோட்டாட்சியரை ஏன் நியமிக்க கூடாது என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகாவில் உள்ள அய்யர்னார் பள்ளி கிராம பஞ்சாயத்து தலைவராக லட்சுமி நாகசங்கர் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

 

பழங்குடியின வகுப்பினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்த கிராம பஞ்சாயத்தில், போலி சாதிச் சான்று அளித்து லட்சுமி நாகசங்கர் போட்டியிட்டதாகக் கூறி, நிர்குணா என்பவர் புகார் அளித்தார். கடந்த ஜனவரி முதல் இந்த புகார் மீதான விசாரணை நிலுவையில் உள்ளதால், விரைந்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க கோரி நிர்குணா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்செல்வி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த லட்சுமி நாகசங்கர், பழங்குடியினர் என போலி சான்று பெற்று தேர்தலில் போட்டியிட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இதையடுத்து, மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை எனக் கூறிய நீதிபதிகள், தேர்தல், கல்வி, வேலைவாய்ப்புகளில், பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டை, தகுதியில்லாத பிற வகுப்பைச் சேர்ந்தவர்கள் தட்டிப்பறிப்பதாகவும், இதன் மூலம் பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவரின் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்தனர். 

 

இதைத் தடுக்க, பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான சாதிச் சான்றுகள், இருப்பிட சான்று, வருவாய் சான்றுகளை வழங்க மாவட்டந்தோறும் வருவாய் கோட்டாட்சியர்களை அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் என யோசனை தெரிவித்த நீதிபதிகள், இதுகுறித்து விளக்கமளிக்கும்படி, தமிழக வருவாய் துறை செயலருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 7ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும், லட்சுமி நாகசங்கர், தான் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

 


 

சார்ந்த செய்திகள்