Skip to main content

“விவசாயக் கடன் வழங்கியதில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” - உயர் நீதிமன்றம் உத்தரவு!

Published on 23/08/2021 | Edited on 23/08/2021

 

"An order should be issued to investigate the irregularities in the disbursement of agricultural loans" - High Court order

 

சேலம் மாவட்டம், செல்லியம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயக் கடன் வழங்கியதில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு ஒருவாரத்தில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்து, கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்ட பிறகு, முன்தேதியிட்டு கடன்கள் வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக சேலம் மாவட்டம், செல்லியம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் தலைவருக்கு எதிராக குற்றஞ்சாட்டி, சங்கத்தின் உறுப்பினர் குணசேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

அவர் தனது மனுவில், கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என கணித்து, கூட்டுறவு சங்கத் தலைவர்,  2020 ஆகஸ்ட் முதல் 2021 ஜனவரி வரை போலி பெயர்களில் பலருக்குப் பயிர்க்கடன்களை வழங்கியதன் மூலம் சங்கத்திற்கு லட்சக்கணக்கான ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். விவசாயிகளின் கடன் சுமையைக் குறைக்கும் நல்லெண்ணத்தில் அரசு பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்ததை, கூட்டுறவு சங்கத்தின் தலைவர் தவறாக பயன்படுத்தியுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2020 ஜூன் முதல் 2021 பிப்ரவரி வரை செல்லியம்பாளையம் கூட்டுறவு சங்கம் வழங்கிய பயிர்க்கடன் குறித்து விசாரிக்கும்படி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 1ம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்