ADVERTISEMENT

தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்!! 

05:40 PM Jun 15, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் விண்ணப்பங்களையும் மேல் முறையீட்டு மனுக்களையும் 2 மாதங்களில் முடிக்க வேண்டும் என, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பாலையன், தனது மகன் பட்டாபிராமனிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டு திருவாரூர் வருவாய் கோட்டாட்சியருக்கு விண்ணப்பித்தார்.

விண்ணப்பத்தைப் பரிசீலித்த கோட்டாட்சியர், மாதம் 10 ஆயிரம் ரூபாயை ஜீவனாம்சமாக பாலையனுக்கு வழங்க உத்தரவிட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில் தனக்கு ஜீவனாம்சம் வழங்கவில்லை எனக் கூறி, திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு மேல் முறையீடு செய்தார். அதன் மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால், தனது மேல் முறையீட்டு மனுவைப் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கக் கோரி பாலையன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தனது சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்ட மகன் பட்டாபிராமன், வருவாய் கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவுபடி ஜீவனாம்சம் வழங்கவில்லை என பாலையன் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து, மூத்த குடிமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதற்காகவே பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்புச் சட்டம் இயற்றப்பட்டதாகக் குறிப்பிட்ட நீதிபதி, இந்தச் சட்டப்பிரிவின் கீழ் அளிக்கப்படும் விண்ணப்பங்களையும், மேல் முறையீட்டு மனுக்களையும் முடிவுக்கு கொண்டுவருவதில் தாமதம் ஏற்படுத்துவது அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்யத் தவறுவதற்கு சமம் எனக் கூறி, மனுதாரரின் மேல் முறையீட்டு மனு மீது எட்டு வாரங்களில் முடிவெடுக்க திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.

மேலும், பெற்றோர், மூத்த குடிமக்கள் நலன் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புச் சட்டத்தின்கீழ் அளிக்கப்படும் விண்ணப்பங்கள், மேல் முறையீட்டு மனுக்களை இரண்டு மாதங்களில் முடிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT